Suresh Raina tamil news: ஐ.பி.எல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பெற்று விளையாடி வரும் சுரேஷ் ரெய்னா அந்த அணியின் முக்கியமான வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். தொடரின் முதல் சீசன் முதலே சென்னை அணியில் நீடித்து வரும் இவர் ஸ்பாட் பிக்சிங் காரணமாக சென்னை அணிக்கு விளையாட தடை ஏற்படுத்தப்பட்ட போது குஜராத் லயன்ஸ் அணியை வழிநடத்தினார். பின்னர் மீண்டும் சென்னை அணிக்கு திரும்பி அணியின் வெற்றிக்கு உதவினார், உதவியும் வருகிறார்.

கடந்த ஆண்டு ஐக்கிய அமீரகத்தில் நடந்த ஐ.பி.எல் தொடரில் பார்ம்-அவுட் ஆனா நிலையில் இருந்த ரெய்னாவை பலரும் விமர்சித்து வந்தனர். இதற்கு முற்று புள்ளி வைக்கும் விதமாக தற்காலிமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ள இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் ரெய்னா.

இந்த தொடரில் எஞ்சியுள்ள போட்டிகள் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், அடுத்த சீசனுக்கான தொடரில் எந்தெந்த அணியில் எந்தெந்த வீரர்கள் தக்க வைக்கப்பட உள்ளனர், விடுவிக்கப்பட உள்ளனர் என்பது குறித்த விவாதம் தற்போது எழுந்துள்ளது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கடந்த 2008ம் ஆண்டு முதல் (2016 மற்றும் 2017 தவிர) வழிநடத்தி வரும் கேப்டன் எம்.எஸ் தோனி அடுத்த சீசனுக்கும் தலைமை ஏற்பாரா என்பது போன்ற கேள்விகளும் எழுப்பட்டும், விவாதத்திற்குட்படுத்தப்பட்டும் வருகின்றன.

இந்த நிலையில், “ஐ.பி.எல் தொடரில் இருந்து எம்.எஸ்.தோனி ஓய்வு பெற முடிவு செய்தால் நானும் ஓய்வு பெறுவேன்” என்று சென்னை அணியின் முன்னணி வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.

நியூஸ் 24 ஸ்போர்ட்ஸ்க்கு அவர் அளித்த பேட்டியில், “என்னால் இன்னும் 4, 5 ஆண்டுகள் கிரிக்கெட் விளையட முடியும். இந்தாண்டுக்கான ஐ.பி.எல் இன்னும் உள்ளது. எதிர்வரும் தொடரில் 2 அணிகள் உதயமாக உள்ளன. ஆனால், நான் சென்னை அணிக்காக மட்டுமே விளையாடுவேன். இந்தாண்டுக்கான தொடரில் சிறப்பாக நாங்கள் விளையாடுவோம் என நம்புகிறேன்.” என்றுள்ளார்.

மேலும் அவர் பேசுகையில், “தோனி பாய் அடுத்த சீசனில் விளையாடவில்லை என்றால், நானும் விளையாட மாட்டேன். நாங்கள் 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடுகிறோம் (சிஎஸ்கேக்காக). இந்த ஆண்டு நடக்கும் தொடரில் நாங்கள் வென்றால், அடுத்த வருடமும் விளையாட அவரை நான் சமாதானப்படுத்துவேன். நான் என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன். அவர் விளையாடாவிட்டால், நான் எந்த ஐபிஎல் அணிக்கும் விளையாடுவேன் என்று நான் நினைக்கவில்லை” என சுரேஷ் ரெய்னா நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து முன்னாள் கேப்டன் எம். எஸ் தோனி ஓய்வு பெறுவதாக அறிவித்த சில மணி நேரங்களிலேயே சுரேஷ் ரெய்னாவும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார் என்பது இங்கு குறிப்பிடத்தக்க ஒன்று.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil“