பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.
புச்சி பாபு கிரிக்கெட் 2024 போட்டிக்காக இந்திய டி20 கிரிக்கெட் அணி கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்ட மும்பை அணியின் வீரர்கள் கோவை வந்துள்ளனர். இங்குள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் அங்கமான (SRIOR) ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் இலவச புற்றுநோய் சிகிச்சை பெற்றுவரும் 14 குழந்தைகளை நேரில் சந்தித்தனர்.
2024 டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடியபோது சூரியகுமார் யாதவின் அதிரடி கேட்ச் போட்டியை இந்தியா அணிக்கு சாதகமாக மாற்றியது. இதற்கு பின் இந்திய தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி வெற்றிபெற்றது. அதன்பிறகு ஒவ்வொரு இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் ஹீரோவாக சூரியகுமார் யாதவ் மாறியுள்ளார்.
இந்த நிலையில், கோவையில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை ஊக்கப்படுத்தி அவர்கள் முகத்தில் மகிழ்ச்சியை வரவழைத்தான் மூலம் ஹீரோவுக்கும் ஒரு படி மேல் சென்றுள்ளார் என கூறலாம். இந்த சந்திப்பின் போது ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை & ஆராய்ச்சி மையத்தில் செயல்படும் இலவச புற்றுநோய் சிகிச்சை வார்டில் உள்ள குழந்தைகள் - சூர்யகுமார் யாதவ் மற்றும் குழுவை, சிவப்பு ரோஜாக்களை வழங்கி மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
இதையடுத்து வீரர்கள் குழந்தைகளின் மினி கிரிக்கெட் பேட்களில் கையொப்பமிட்டு அவர்களுக்கு பரிசுகளை வழங்கினர். சில குழந்தைகளிடம் சூர்யகுமார் யாதவ் உரையாடி அவர்களின் ஆர்வங்கள் குறித்து கேட்டறிந்தார். தங்களுக்கு பரிசளித்த வீரர்களுக்கு சூரியகுமார் யாதவ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் உருவப்படங்களை நினைவுப் பரிசுகளாக குழந்தைகள் வழங்கினர். இந்த குழந்தைகள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டுமென சூரியகுமார் யாதவ் மற்றும் குழுவினர் வாழ்த்தினர்.
இதையடுத்து இந்த வார்டில் குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை மற்றும் சிகிச்சையின் காலம் குறித்து சூரியகுமார் யாதவ் - ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் இயக்குனர் டாக்டர்.பி.குகனிடம் கேட்டறிந்தார். டாக்டர்.பி.குகன் குழந்தைகளுக்கு இங்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அவற்றின் விளைவுகள் பற்றி அவரிடம் விளக்கினார்.
இந்த வார்டு இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் 2005"ஆம் ஆண்டில் திறந்து வைக்கப்பட்டதாகவும், இதில் இதுவரை 1000-க்கும் மேற்பட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் இலவசமாக சிகிச்சை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“