துலீப் கோப்பை தொடரின் 3-வது மற்றும் கடைசி ரவுண்ட் ஆட்டங்கள் ஆந்திர மாநிலம் அனந்தபூரில் நடைபெற்றன. இதில் மயங்க் அகர்வால் தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, ருதுராஜ் கெய்வாட் தலைமையிலான இந்தியா 'சி' அணியடன் மோதியது.
இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய ஏ அணி முதல் இன்னிங்சில் 297 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய சி அணி முதல் இன்னிங்சில் 234 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. பின்னர் 63 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய ஏ அணி 286 ரன்களில் டிக்ளேர் செய்தது. அதிகபட்சமாக ரியான் பராக் 73 ரன்னும், ஷஷ்வாத் ராவத் 53 ரன்னும் எடுத்தனர். இந்தியா சி தரப்பில் அதிகபட்சமாக கவுரவ் யாதவ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை துரத்திய இந்தியா சி அணி 217 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இந்தியா ஏ அணி 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியா சி தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 111 ரன்கள் அடித்தார். இந்தியா ஏ அணியில் அதிகபட்சமாக தனுஷ் கோட்டியான், பிரசித் கிருஷ்ணா தலா 3 விக்கெட்டுகள் எடுத்தனர்.
இந்நிலையில், மொத்தமாக விளையாடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்ற இந்தியா ஏ அணி 2024 துலீப் கோப்பையை வென்று சாதனை படைத்தது. மறுபுறம் கடைசிப் போட்டியில் சொதப்பிய இந்தியா சி அணி 2-வது இடத்தை பிடித்தது.
ஸ்லெட்ஜ் செய்யப்பட்ட சூரியகுமார் கொடுத்த பதில்
இந்நிலையில், இந்த துலீப் கோப்பை தொடரின் இந்தியா பி அணியில் இந்திய டி20 கேப்டன் சூரியகுமார் யாதவ் விளையாடினர். காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி இருந் அவர் முதல் இரண்டு போட்டிகளை தவற விட்டார். காயத்தில் இருந்து மீண்ட பிறகு, அவர் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்தியா டி அணிக்கு எதிராக தொடரின் 5-வது போட்டியில் சூரியகுமார் களமாடினார். அவர் இரண்டு இன்னிங்ஸிலும் 5, 16 என சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார். இரண்டு இன்னிங்ஸிலும் அவரது விக்கெட்டை இந்திய அணி டி அணி வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் வீழ்த்தி இருந்தார். இந்நிலையில், இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சுக்குப் பின்னர் திரும்பியபோது, டிரஸ்ஸிங் ரூம் அருகே நின்று கொண்டிருந்த அர்ஷ்தீப் சிங், குறைந்த ஸ்கோர் எடுத்த சூரியகுமாரை ஸ்லெட்ஜ் செய்துள்ளார்.
முதல் இன்னிங்ஸில் சூரியகுமாரை ஆட்டமிழக்கச் செய்த பிறகு, அர்ஷ்தீப் சூரியகுமார் டிரஸ்ஸிங் ரூமில் சுற்றித் திரிந்துள்ளார். அப்போது அவரிடம், "அப்படித்தான் நீங்கள் விளையாடியிருக்க வேண்டும்" என்று கூறிய அர்ஷ்தீப், அந்த ஷாட் போல் சைகை செய்து காட்டியுள்ளார். இதனைப் பார்த்த சூரியகுமார், 'போடா ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்' என்பது போல் சிரித்தவாறு பதிலளித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.