Suryakumar-yadav | mumbai-indians: ஐ.பி.எல் தொடருக்கான மும்பை இந்தியன்ஸ் மிகவும் பிரபலமான அணிகளுள் ஒன்றாக உள்ளது. இந்த அணியை ரிக்கி பாண்டிங்கிற்குப் பிறகு 2013 முதல் கேப்டனாக ரோகித் சர்மா வழிநடத்தி வந்தார். அவரது தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஒரு முறை சாம்பியன்ஸ் லீக் டி20 பட்டத்தை வென்றுள்ளது.
மும்பை இந்தியன்ஸ் அணியின் அடுத்த கேப்டன் வாய்ப்பு ஹர்திக் பாண்டியாவுக்கு என சூழல் நிலவி வந்த நிலையில், அவரை 2022 ஐ.பி.எல் தொடரில் அறிமுகமான குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டனாக நியமித்தது. அந்த அணியிலும் தன்னை நிரூபித்துக் காட்டிய ஹர்திக், தொடக்க சீசனிலே அணியை சாம்பியன் பட்டத்தை வாகை சூட உதவினார். அடுத்த சீசனில் (2023) அவரது தலைமையிலான குஜராத் இறுதிப்போட்டி வரை முன்னேறி இருந்தது.
ஒருபுறம் ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு குஜராத்துடன் ஐக்கியமாகியதால், அந்த அணியை ரோகித் சர்மாவுக்குப் பிறகு வழிநடத்தப்போவது யார் என்கிற கேள்வி இருந்து வந்தது. இந்த கேள்வி எழுந்தபோதெல்லாம், பும்ரா, சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன் ஆகியோரின் பெயர்களை ரசிகர்கள் குறிப்பிட்டு வந்தார்கள்.
ஹர்திக் பாண்டியா போலவே இந்த மூன்று வீரர்களும் தாங்கள் ஐ.பி.எல் தொடருக்கு அறிமுகமான காலம் தொட்டு மும்பை அணிக்காக விளையாடி வருகிறார்கள். ரோகித் இன்னும் ஓராண்டு ஐ.பி.எல் தொடரில் கேப்டனாக செயல்படுவார் என்றும், பிறகு பும்ரா அல்லது சூர்யகுமார் யாதவ் கேப்டன் ஆவார் என்ற எதிர்பார்ப்பு அந்த அணியின் வீரர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் இருந்தது.
இந்த நிலையில் தான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டு, அந்த அணியின் புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டார்.
சூசக பதிவு
இந்த நிலையில், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்த தொடர்பாக சூர்யகுமார் யாதவ் மனைவி பதிவிட்ட சமூக வலைதள பதிவை அவரே அழித்துள்ளார். அந்தப் பதிவு இணையத்தில் வைரலாகிறது. சூர்யகுமார் யாதவ் மனைவி தேவிஷா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பதிவில், "நீங்கள் மனிதர்களை நடத்தும் விதம் எப்போதும் எங்கள் நினைவில் இருக்கும்" என்று பதிவிட்டு இருந்தார். இதன் மூலம், ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமிக்கப்பட்டதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் வீரர்கள் இடையே பெரிய அளவில் அதிருப்தி இருப்பது தெரிய வந்துள்ளது.
முன்னதாக, பும்ரா "அமைதியே சிறந்த பதில்" என ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு திரும்பிய போது சூசகமான பதிவு ஒன்றை வெளியிட்டு இருந்தார் என்பது குறிப்பித்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.