சென்னையில் நடைபெறும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்பதற்காக சுவிட்சர்லாந்து அணி சென்னை வந்துள்ளது. இதில், சுவிட்சர்லாந்து அணியின் நட்சத்திர ஆட்டக்காரரும், நம்பர்.1 வீராங்கனையுமான அம்ரே அலின்க்ஸ் அந்த அணியில் இடம்பெறவில்லை. இதுகுறித்து சுவிட்சர்லாந்து அணி பயிற்சியாளர் கூறும்போது, "இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறி அம்ரே சென்னை வர அவரது பெற்றோர்கள் மறுத்துவிட்டனர்" என தனியார் செய்தி நிறுவனம் ஒன்றில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"இது முரணாக உள்ளது. உலகில் பெண்களுக்கான பாதுகாப்பான இடங்களில் சென்னையும் ஒன்று. சொல்லப்போனால் சுவிட்சர்லாந்தைவிட சென்னை பாதுகாப்பானது. ஆனால், உண்மையை விட பொய் வேகமாகப் பரவியுள்ளது. பெண்கள் மீதான இந்தியாவின் மதிப்பு குறித்த நம்பிக்கையை நாம் இந்த உலகில் மீட்டெடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பு அரசிடமிருந்து தொடங்குகிறது" என்று பதிவிட்டு இருந்தார்.
கடந்த 20ம் தேதி நடந்த, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம் பற்றிய விவாதத்தின் போது பேசிய காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி, "பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நாடு இந்தியா என்று ஒரு சர்வதேச பத்திரிகை தெரிவித்துள்ளது. இந்தியாவின் வரலாற்றில் முதன்முறையாக நாட்டின் கௌரவம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில், ட்விட்டரில் பலரும் இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர். அதில், "இந்தியாவில் பெண்களுக்கான பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகத் தான் உள்ளது. 6 மாத குழந்தையில் இருந்து 60 வயது பெண்மணி வரை கூட இங்கு பாதுகாப்பு இல்லை. பெண்கள் தங்களைத் தானே பாதுகாத்தால் தான் உண்டு. வெளிநாட்டில் இருந்து வரும் பெண்கள் கூட கற்பழிக்கப்படும் சம்பவம் அரங்கேறுகிறது" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், "இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது என்பது உண்மை தான். ஆனால், உலக நாடுகளை கம்பேர் செய்கையில், இந்தியா எவ்வளவோ மேல்.. அதிலும், சென்னையில் பெண்களுக்கு அச்சுறுத்தல் என்பது மற்ற மாநிலங்களின் விகிதங்களை கம்பேர் செய்கையில் மிகவும் குறைவு தான்" என்று ஒருவர் பதிவிட்டுள்ளார்.
அல்கா எனும் பெண் பதிவிட்டுள்ள ட்வீட்டில், 'உலகளவில் இந்தியாவுக்கு இது மிகப்பெரிய அவமானம்' என்று குறிப்பிட்டுள்ளார்.
மற்றொருவர், "பிரதமர் மோடி அவர்களே... பப்பு கேட்ட கேள்வியில் இதற்காவது பதில் தாருங்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
கரண் என்ற நபர் தனது ட்வீட்டில், "பெண்கள் பாதுகாப்பில் இந்தியா பின் தங்கியுள்ளது. ஆனால், சென்னை அப்படி இல்லை என இனி நாம் மார் தட்டிக் கொள்ள முடியாது. 12 வயது சிறுமியை 17 பேர் கொண்ட கும்பல் சீரழித்ததை தான் நாம் பார்த்தோமே" என்று பதிவிட்டுள்ளார்.