சையத் முஸ்தாக் அலி கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில், 1 ரன் வித்தியாசத்தில் தமிழ்நாடு அணி தோல்வியடைந்த சம்பவம், கிரிக்கெட் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சையத் முஸ்தாக் அலி கோப்பை டுவென்டி20 கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி, குஜராத் மாநிலம் சூரத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், தமிழ்நாடு அணி, நடப்பு சாம்பியன் கர்நாடக அணியை எதிர்கொண்டது.
முதலில் பேட்டிங் செய்த கர்நாடக அணி, 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் மனிஷ் பாண்டே 60 ரன்களும் (45 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்), ரோகன் கடாம் 35 ரன்களும், தேவ்தத் படிக்கல் 32 ரன்களும் விளாசினர். மயங்க் அகர்வால் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார். தமிழகம் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ஆர்.அஸ்வின், முருகன் அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
181 ரன்கள் என்ற கடின இலக்கை நோக்கி களமிறங்கிய தமிழக அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் விழுந்தன. வாஷிங்டன் சுந்தர் 24 ரன்னிலும், கேப்டன் தினேஷ் கார்த்திக் 20 ரன்னிலும், பாபா அபராஜித் 40 ரன்னிலும் வெளியேறினர். கடைசி ஓவரில் தமிழக அணியின் வெற்றிக்கு 13 ரன் தேவைப்பட்டது. கைவசம் 5 விக்கெட்டுகள் இருந்தன. பரபரப்பான 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் வீசினார். இதில் முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஆர்.அஸ்வின், 3-வது பந்தை அடிக்கவில்லை. 4-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். இதனால் 2 பந்துக்கு 4 ரன் தேவையாக இருந்தது. 5-வது பந்தை எதிர்கொண்ட விஜய் சங்கர் (44 ரன், 27 பந்து, 5 பவுண்டரி) 2-வது ரன்னுக்கு ஓடிய போது ரன்-அவுட் ஆனார். அடுத்து முருகன் அஸ்வின் வந்தார்.
கடைசி பந்தில் தமிழக அணியின் வெற்றிக்கு 3 ரன் தேவைப்பட்டது. இந்த பந்தை சந்தித்த முருகன் அஸ்வின் கிரீசை விட்டு சில அடி இறங்கி வந்து அடிக்க முயற்சித்தார். ஆனால் பந்து கால் அருகிலேயே கிடந்தது. எப்படியோ ஒரு ரன் மட்டும் ஓடி எடுத்தனர்.
இதனால் கர்நாடக அணி ஒரு ரன் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கி, கோப்பையை தக்க வைத்துக் கொண்டது. தமிழக அணியால் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்களே எடுக்க முடிந்தது. ஏற்கனவே விஜய்ஹசாரே கோப்பை இறுதி ஆட்டத்திலும் தமிழக அணி கர்நாடகாவிடம் தான் தோல்வியடைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.