செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நேற்று (ஜனவரி 10ம் தேதி) முதல் கொல்கத்தாவில் நடைபெற்று வருகின்றது. ஈடன் கார்டனில் நடந்த நேற்றைய ஆட்டத்தில் தமிழக அணியும், ஜார்க்கண்ட் அணியும் மோதின. இதில் முதலில் பேட் செய்த தமிழக அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 189 ரன்கள் எடுத்தது. பின்னர் களமிறங்கிய ஜார்க்கண்ட் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 123 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
தமிழக அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய ஜெகதீசன் மற்றும் நிஷாந்த் அணிக்கு சிறப்பான துவக்கத்தை தந்தனர். நிஷாந்த் ஒரு முனையில் அட்டாக் செய்து ஆட அவருக்கு மறுமுனையில் ஜெகதீசன் தட்டி கொடுத்து ஆடினார். அதிரடியாக ஆடிய நிஷாந்த் 64 பந்துகளுக்கு 8 பவுண்டரிகளுடன், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 92 ரன்களை சேர்த்தார். இரண்டு விக்கெட்டுகளுக்கு பிறகு நிஷாந்துடன் ஜோடி சேர்ந்த கேப்டன் தினேஷ் கார்த்திக் மிக துடிப்பாக ஆடி 42 ரன்களை அணிக்காக சேர்த்தார். மோனு குமார் வீசிய 18- வது ஓவரில் 6, 4, 6, 6 என பந்துகளை பறக்க விட்டார்.
ஜார்க்கண்ட் அணியின் வீரர்கள் பவர் பிளே ஓவர்களில் மோசமான ஷாட்களை விளையாடியதால் அந்த அணிக்கு நல்ல துவக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் முக்கிய வீரர்களாக கருதப்படும் இஷான் கிஷன், உத்கர்ஷ் சிங், சோனு யாதவ் போன்றோர் சொற்ப ரன்களில் வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரிதும் சோபிக்காததால் பேட்டிங்கில் தடுமாறிய அந்த அணி தோல்வியை தழுவியது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"