தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரிலும் இந்தியா வெற்றிக் கொடி நாட்டியது. நட்சத்திர வீரரும் கேப்டனுமான விராட் கோலி இல்லாமல் கிடைத்த வெற்றி இது!
இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. டெஸ்ட் தொடரை 1-2 என இழந்த இந்தியா, ஒருநாள் கிரிக்கெட் தொடரில் 5-1 என தென் ஆப்பிரிக்காவை புரட்டியது. டி-20 தொடரிலாவது சாதித்து, ஒருநாள் தொடர் தோல்விக்கு பழி தீர்க்கலாம் என தென் ஆப்பிரிக்கா நினைத்தது.
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்தியாவும், 2-வது டி-20 போட்டியில் தென் ஆப்பிரிக்காவும் ஜெயித்தன. தொடரை வெல்வதோடு, தென் ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்தை வெற்றிகரமாக முடிக்க வேண்டிய விருப்பம் இந்திய அணிக்கு இருந்தது. உள்ளூரில் தொடரில் தோற்ற பழியில் இருந்து தப்ப தென் ஆப்பிரிக்கா துடித்தது.
2-வது டி-20 போட்டியில் இந்தியா நிர்ணயித்த இலக்கை துரத்திப் பிடிக்க முடிந்ததால், இந்த முறையும் டாஸ் ஜெயித்த தென் ஆப்பிரிக்க கேப்டன் ஜே.பி.டுமினி பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஷிகர் தவானும் களமிறங்கினர். இரண்டாவது ஓவரில் ரோகித் சர்மா 8 பந்துகளில் 2 பவுண்டரியுடன் 11 ரன்களில் அவுட்டானார்.
அதிரடியாக ஆடிய சுரேஷ் ரெய்னா 27 பந்துகளில் ஒரு சிக்சர், 5 பவுண்டரியுடன் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரது அதிரடியால் இந்தியாவின் ரன் விகிதம் ஆரோக்கியமாக இருந்தது. ஷிகர் தவான் இரு கேட்ச் கண்டங்களில் இருந்து தப்பித்து, ஓரளவு தாக்குப்பிடித்தார். அவர் அவர் 40 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 47 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
தோனி 11 பந்துகளில் 12 ரன்களும், தினேஷ் கார்த்திக் 13 ரன்களும், பாண்ட்யா 21 ரன்களும் எடுத்து அவுட்டாகினர். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 172 ரன்கள் எடுத்தது. அக்சர் படேல் ஒரு ரன்னுடனும், புவனேஷ்வர் குமார் 3 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் ஜூனியர் டாலா 3 விக்கெட்டும், மாரிஸ் 2 விக்கெட்டும், ஷம்சி ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்ரிக்கா களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஹென்ரிக்ஸ், மில்லர் இறங்கினர். இந்த ஜோடியை புவனேஷ்வர் குமார் பிரித்தார். அணியின் எண்ணிக்கை 10 ஆக இருந்தபோது ஹென்ரிக்ஸ் அவுட்டானார். ரெய்னா பந்து வீச்சில் மில்லர் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் 10 ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட்டுக்கு 52 ரன்களே எடுத்தது.
அடுத்து டுமினியுடன் ஜோடி சேர்ந்த கிளாசனை 7 ரன்களில் பாண்ட்யா அவுட்டாக்கினார். அப்போது அணியின் எண்ணிக்கை 3 விக்கெட்டுக்கு 79 ஆக இருந்தது. சிறப்பாக ஆடிய டுமினி அரை சதமடித்தார். அவரை ஷர்துல் தாகுர் அவுட்டாக்கினார். டுமினி 41 பந்துகளில் 3 சிக்சர், 2 பவுண்டரியுடன் 55 ரன்கள் எடுத்தார்.
கிரிஸ் மோரிசை, பும்ரா அவுட்டாக்கினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. தென் ஆப்ரிக்கா அணி வெற்றி பெற 21 பந்துகளில் 59 ரன் தேவைப்பட்டது. ஜோங்கரும், பெஹார்டியனும் களத்தில் இருந்தனர். 18வது ஓவரில் ஒரு சிக்சர் 3 பவுண்டரி என 18 ரன்கள் அடித்தனர். இதனால் கடைசி 2 ஓவரில் 35 ரன் தேவைப்பட்டது.
19வது ஓவரில் 16 ரன்கள் எடுக்கப்பட்டது. இதனால் கடைசி 6 பந்துகளில் 19 ரன்கள் தேவைப்பட பரபரப்பு அதிகரித்தது. புவனேஷ்வர் வீசிய அந்த ஓவரில் முதல் பந்தில் ஜோங்கர் ஒரு ரன் எடுத்தார். இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தனர். 3வது பந்தில் ஒரு ரன் கிடைத்தது. 4வது பந்து வைடாக அமைந்தது. இதனால் 3 பந்துகளில் 12 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த இரண்டு பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே கிடைத்தது.
இதனால் கடைசி பந்தில் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், சிறப்பாக ஆடிய ஜோங்கர் 24 பந்துகளில் 2 சிக்சர் 5 பவுண்டரியுடன் 49 ரன்களில் கடைசி பந்தில் அவுட்டானார். இறுதியில் தென் ஆப்ரிக்க அணி 6 விக்கெட்டுக்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்திய அணியின் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டும், பும்ரா, தாகுர், பாண்ட்யா, ரெய்னா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, இந்திய அணி டி-20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி கோப்பையை வென்றது. ஆட்ட நாயகனாக சுரேஷ் ரெய்னாவும், தொடர் நாயகனாக புவனேஷ்வர் குமாரும் தேர்வு செய்யப்பட்டனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வரலாற்றில் இந்த தென் ஆப்பிரிக்கத் தொடர் மறக்க முடியாதது. டெஸ்ட் தொடரை இழந்தாலும்கூட அதிலும் இந்திய அணி கடும் போட்டி கொடுக்கவே செய்தது. கடைசி டி-20 போட்டியில் முதுகு வலி காரணமாக கேப்டன் விராட் கோலி ஆடவில்லை. அப்படி இருந்தும் ரோகித் சர்மா தலைமையில் களம் இறங்கி வாகை சூடி தொடரை வென்றதுடன், தென் ஆப்பிரிக்க சுற்றுப் பயணத்தையும் இனிதாக முடித்து வைத்திருக்கிறார்கள்.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆஸ்திரேலிய, இங்கிலாந்து சுற்றுப் பயணங்களுக்கு இந்தத் தொடர் பெரும் உந்துதலாக அமையும். அடுத்த ஆண்டு உலகக் கோப்பை போட்டிக்கும் நம்பிக்கையளிக்கும் தொடராக இது அமைந்தது.