தமிழகத்தில் இருந்து புறப்பட்டு இந்திய கிரிக்கெட் அணியில் மையம் கொண்டுள்ள யார்க்கர் புயல் டி.நடராஜன் டி20, ஒருநாள் போட்டிகளை அடுத்து இப்போது ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் அணியில் இடம்பிடித்துள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கிராமங்களில் கிரிக்கெட் விளையாடும் பல சிறுவர்களுக்கு முன்மாதிரி சேலத்தைச் சேர்ந்த நடராஜன்தான். சேலம் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் சாதாரண குடும்பத்தில் பிறந்த நடராஜன் இன்று இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்து எல்லோரையும் தலைநிமிர்ந்து அண்ணாந்து பார்க்க வைத்துள்ளார்.
இடது கை வேகப் பந்துவீச்சாளரான நடராஜன் தனது அசாத்தியமான யார்க்கர் பந்துகளால் பேட்ஸ்மேன்களை நிலைகுலைய வைத்து விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். டி.என்.பி.எல், ஐபிஎல் என்று தனது திறமையால் முன்னேறிய டி.நடராஜன், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் நெட் பவுலராக சென்றார். இந்திய அணியில் பந்துவிச்சாளர்கள் காயம் அடைந்ததால், டி.நடராஜனுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி, டி20 போட்டிகளில் தனது அசாத்தியமான பந்துவீச்சால் விக்கெட்டுகளை வீழ்த்தி தனக்கான இடத்தை உறுதி செய்தார். ஒருநாள், டி20 தொடர் முடிந்தாலும் இந்திய கிரிக்கெட் அணி நிர்வாகம் அவரை ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு அனுப்பாமல் டெஸ்ட் தொடரில் வலைப் பயிற்சியில் பந்துவீசுவதற்கு அங்கேயெ நிறுத்திக்கொண்டது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், கோலி தலைமையிலான இந்திய அணி படுதோல்வி அடைந்தது. கோலியின் மனைவிக்கு குழந்தை பிறந்ததால் அவர் உடனடியாக இந்தியா திரும்பினார். அவருக்கு பதிலாக, ரஹானே கேப்டன் பொறுப்பேற்று 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடியதில் இந்திய அணி சிறப்பான வெற்றி பெற்றது.
இருப்பினும், டெஸ்ட் அணியில் தமிழக வீரர் டி.நடராஜனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருந்தால் அவருடைய திறமை வெளிப்பட்டிருக்கும் என்று பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.
இந்த நிலையில், இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்றிருந்த வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் அடைந்தார். அதனால், அவருக்கு பதிலாக நடராஜனுக்கு அணியில் இடம் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
தற்போது, பிசிசிஐ ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக தமிழகத்தின் யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் நடராஜன் இடம்பெறுகிறார் என்று அறிவித்துள்ளது. இதன் மூலம் நடராஜனின் ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பிசிசிஐ ட்விட்டர் பக்கத்தில், “இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் உமேஷ் யாதவுக்கு பதிலாக டி நடராஜன் இடம்பெறுகிறார்” என்று தெரிவித்துள்ளது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"