இளைஞர்களுக்கு மும்பை டி20 லீக் ஒரு நல்ல அடித்தளம் - சச்சின்

நடைபெறவுள்ள மும்பை டி20 லீக் தொடர் மிக அவசியமானது என்றும், தங்களது திறமையை நிரூபிக்க, இத்தொடர் அவர்களுக்கு சிறந்த தளமாக இருக்கும் என்று மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார். மும்பை டி20 லீக்கின் பிராண்ட் அம்பாசடராக சச்சின் உள்ளார்.

இதுகுறித்து சச்சின் அளித்த பேட்டியில், “மும்பை கிரிக்கெட்டுக்கு இதுபோன்ற டி20 நிச்சயம் தேவை. இந்திய கிரிக்கெட்டை அதிகளவிலான மும்பை கிரிக்கெட் வீரர்கள் வழிநடத்துவதே இதற்கு எடுத்துக்காட்டு. இதில் நானும் பங்கு பெற்று இருக்கிறேன் என்பதை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது.

41 முறை மும்பை அணி ரஞ்சி டிராபியை வென்றுள்ளது. நான் சிறுவனாக இருந்த போது, இங்குள்ள ஷிவாஜி பார்க்கில், காமத் நினைவு கிளப்பில், பத்மாகர் ஷிவல்கர் எனக்கு பவுலிங் செய்தது எனக்கு இன்னும் நன்றாக நினைவு இருக்கிறது. அவருக்கு அப்போது எனது வயதை விட மூன்று மடங்கு அதிக வயது இருக்கும் என நினைக்கிறேன். ஆனால், அவர் எனக்கு பவுலிங் செய்தார்.

நாங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை துவங்கிய போது, டென்னிஸ் பந்தில் தான் விளையாடினோம். எப்படி விளையாடுவது என்று நாங்களே கண்டறிந்து கொள்வோம். ஆனால், அதன் பிறகு திறமையான இளைஞர்களை ஊக்குவிக்க நிறைய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இத்தொடர் உங்களுக்கு அப்படியொரு வாய்ப்பை உருவாக்கி கொடுக்கப் போகிறது.

மும்பைக்காரர்கள் நிறைய பேர் இந்திய அணியில் விளையாடி உள்ளனர். அவர்கள் அனைவரும் உண்மையில் இந்திய அணிக்காக தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். இதேபோல், நிறைய கிளப் வீரர்கள் ரஞ்சித் தொடர் வரை முன்னேறி விளையாடியுள்ளனர். ஆனால், அவர்கள் இந்திய தேசிய அணியில் இடம் பிடிக்கவில்லை.

அதேசமயம், இதுபோன்ற தொடர்களில் விளையாடுவதன் மூலம், நீங்கள் ரஞ்சி அணியில் இடம் பிடிக்க முடியவில்லை என்றாலும், உங்களால் குடும்பத்தை பார்த்துக் கொள்ள முடியும். ஒவ்வொருவருக்கும் குடும்பத்தை கவனிப்பது என்பது மிக முக்கியமான விஷயமாகும். குடும்பத்தை நன்றாக கவனித்து, பொருளாதார ரீதியில் அவர்களை நிலைப்படுத்தி முதுகெலும்பாக இருந்தால், அந்த உணர்வே தனி.

ஐபிஎல் தொடங்கிய போது, அது இந்தளவிற்கு மிகப்பெரிய வெற்றியை பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆனால், இதுதான் இன்று பல கிரிக்கெட் வீரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது” என்றார்.

×Close
×Close