Namibia vs Oman | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 2) முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், இன்று (திங்கள்கிழமை) வெஸ்ட் இண்டீசில் உள்ள பார்படாஸ் பிரிட்ஜ்டவுன் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற 3-வது லீக் ஆட்டத்தில் ஓமன் - நமீபியா மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நமீபியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து, முதலில் பேட்டிங் செய்த ஓமன் அணி நமீபியா பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 19.4 ஓவர்களில் 109 ரன்கள் மட்டும் எடுத்து ஆல்-அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக காலித் கைல் 34 ரன்கள் எடுத்தார். நமீபியா அணி தரப்பில் ரூபன் டிரம்பெல்மேன் 4 விக்கெட்டுகளையும், டேவிட் வைஸ் 3 விக்கெட்டுகளையும், கேப்டன் ஹெகார்ட் எராஸ்மஸ் 2 விக்கெட்டுகளையும், பெர்னார்ட் ஸ்கோல்ட்ஸ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதனைத் தொடர்ந்து, 110 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நமீபியா 20 ஓவரிகளில் 109 ரன்கள் எடுத்தது. இதனால், ஆட்டம் சமனில் முடிந்ததால், வெற்றி தோல்வியை தீர்மானிக்கு சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. சூப்பர் ஓவரில் முதலில் பேட்டிங் நமீபியா செய்தது. ஓமன் தரப்பில் சூப்பர் ஓவரை பிலால் கான் வீசினார். அதனை எதிர்கொண்ட நமீபியா அதிரடியாக விளையாடி ஒரு சிக்ஸ் 3 பவுண்டரிகள் உட்பட 21 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து, 22 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற பரபரப்பான சூழலில் களமிறங்கிய ஓமன் வெறும் 10 ரன்கள் மட்டுமே அடித்தது. இதன் மூலம் பரபரப்பாக நடைபெற்ற இந்த சூப்பர் ஓவரில் ஓமனை 11 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நமீபியா வெற்றி பெற்றது.
12 ஆண்டுகளுப் பிறகு...
டி20 உலகக்கோப்பை தொடரில் 12 ஆண்டுகளுப் பிறகு அரங்கேறும் முதல் சூப்பர் ஓவர் போட்டி இதுவாகும். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் இதுவரை 4 முறை போட்டி சமனில் முடிந்துள்ளது. அதில், 3 போட்டிகளுக்கு சூப்பர் ஓவர் முறை அறிமுகம் செய்யப்பட்டது. அவ்வகையில், நமீபியா - ஓமன் போட்டியில் மூன்றாவது முறை சூப்பர் ஓவர் முறை கொண்டுவரப்பட்டது.
2007ல் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் சமனில் முடிந்த நிலையில், அப்போது, போல்ட்-அவுட் மூலம் வெற்றியை தீர்மானிக்கும் முறை கொண்டுவரப்பட்டது.
முதல் சூப்பர் ஓவர் 2012 இல் கண்டியில் நியூசிலாந்தை வீழ்த்தியபோது விளையாடப்பட்டது. அதே, சீசனில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான எதிரான மற்றொரு சூப்பர் ஓவரில் நியூசிலாந்து தோல்வியடைந்தது.
டி20 உலகக் கோப்பை சூப்பர் ஓவர்களின் பட்டியல்:
1. நியூசிலாந்து 174/7 (20 ஓவர்கள்) – இலங்கை 174/6 (20 ஓவர்கள்) – இலங்கை வெற்றி சூப்பர் ஓவர், 13/1 – 7/1 – கண்டி, 2012.
2. வெஸ்ட் இண்டீஸ் 139 (19.3 ஓவர்கள்) – நியூசிலாந்து 139/7 (20 ஓவர்கள்) – வெஸ்ட் இண்டீஸ் சூப்பர் ஓவர் வெற்றி, 19/0 – 17/0 – கண்டி, 2012.
3. ஓமன் 109 (20 ஓவர்கள்) - நமீபியா 109/7 (20 ஓவர்கள்) - நமீபியா சூப்பர் ஓவர் வென்றது, 21/0 - 10/1 - பார்படாஸ், 2024.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“