T20 World Cup 2024 | India Vs England | Afghanistan vs South Africa: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக் கட்டத்தை நெருங்கியிருக்கும் இந்த தொடரில் இந்தியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா ஆகிய 4 அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றுள்ளன.
இதில், தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரைஇறுதிப்போட்டி இந்திய நேரப்படி நாளை (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு டிரினிடாட் தாரூபா நகரில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்குகிறது. இதனைத் தொடர்ந்து, இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் தொடங்கும் 2-வது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோத உள்ளன.
ஆங்கிலத்தில் படிக்கவும்: T20 World Cup weather: Who will qualify if South Africa-Afghanistan, India-England semifinals are washed out?
இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் அரைஇறுதிப் போட்டிகள் மழை காரணமாக கைவிடப்பட்டால் என்ன நடக்கும்? இந்த இரண்டு போட்டிகளுக்கும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளதா? இரண்டு போட்டிகளும் கைவிடப்பட்டால் எந்த அணிகளுக்கு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்? என அடுக்கடுக்கான கேள்விகளை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் எழுப்பி வருகிறார்கள்.
அந்த வகையில், இந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் முன், இரண்டு அரைஇறுதி போட்டிகள் நடக்கும் நகரங்களில் நிலவும் வானிலை நிலவரம் பற்றி முதலில் பார்க்கலாம்.
அரையிறுதிப் போட்டிகள் இந்திய நேரப்படி வியாழக்கிழமை காலை மற்றும் மாலையில் நடக்க உள்ளன. இந்த இரண்டு போட்டிகளின் போதும் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதுமட்டுமல்லாமல், இந்த வாரம் முழுவதும் தொடர்ந்து அங்கு மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது அரையிறுதிப் போட்டி நடக்கும் கயானாவில் உள்ள பிராவிடன்ஸ் ஸ்டேடியத்தில் ஜூன் 8 முதல் எந்த போட்டியும் நடைபெறவில்லை.
ஜூன் 26 அன்று தருபா வானிலை நிலவரம்:
புதன்கிழமை மாலை தருபா நகரில் சமீபத்திய வானிலை முன்னறிவிப்பின் படி மழை கணிக்கப்படவில்லை என்றாலும், தென் ஆப்பிரிக்கா-ஆப்கானிஸ்தான் மோதலுக்கு இரவு முழுவதும் நிலைமை மேகமூட்டத்துடன் இருக்கும்.
ஜூன் 27 அன்று கயானா வானிலை நிலவரம்:
உள்ளூர் நேரப்படி காலை 10:30 மணிக்கு போட்டி தொடங்கும் போது, இந்தியா-இங்கிலாந்து அரையிறுதிப் போட்டிக்கு மழை அச்சுறுத்தல் இருக்கும். குறிப்பாக, மாலை 5-6 மணிக்குள் மழைக்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும் எதிர்பார்க்கப்படுகின்றன.
டி20 உலகக் கோப்பை: 2 அரைஇறுதிப் போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால் இறுதிப் போட்டிக்கு யார் தகுதி பெறுவார்கள்?
தென் ஆப்பிரிக்கா - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் முதல் அரை இறுதிப் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே ஒதுக்கப்பட்டுள்ளது. இப்போட்டியானது, வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்க உள்ளது. போட்டி நேரத்தை தாண்டி 60 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்படும். அதே நாளில் அந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் போட்டி முடியாவிட்டால், அதற்கு அடுத்த நாள் ரிசர்வ் நாளாக இருக்கும். அன்று 190 நிமிடங்கள் கூடுதலாக வழங்கப்படும். அதற்குள் போட்டியை நடத்தி முடிக்க வேண்டும்.
அதே நேரத்தில், இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது அரைஇறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே ஒதுக்கப்படாவிட்டாலும், 250 நிமிடங்கள் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. இந்தப் போட்டி வெஸ்ட் இண்டீஸ் நேரப்படி காலை 10 மணிக்கு தொடங்க இருப்பதால் போட்டி நேரத்தை தாண்டி கூடுதலாக 250 நிமிடங்கள் (4 மணி நேரம் 10 நிமிடங்கள்) ஒதுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இரண்டு அரை இறுதி போட்டிகளுக்கும் சரிசமமாக 250 நிமிடங்கள் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது. முதல் அரை இறுதி இரவு நேரத்தில் நடப்பதால் முதல் நாள் 60 நிமிடங்களும், அதற்கு அடுத்த நாள் 190 நிமிடங்களும் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில், இரண்டு அரை இறுதிக்கும் 250 நிமிடங்கள் மட்டுமே கூடுதலாக வழங்கப்பட உள்ளது.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் கைவிடப்பட்டால், சூப்பர் 8 சுற்றில் எந்த அணி தனது பிரிவில் முதலிடத்தில் இருந்ததோ, அந்த அணியே இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும். அதன்படி, முதல் அரை இறுதிப் போட்டி மழையால் கைவிடப்பட்டால், குரூப் 2-ல் முதல் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்கா இறுதிப் போட்டிக்கு முன்னேறிவிடும். இதேபோல், மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, சூப்பர் 8-ல் குரூப் 1ல் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இறுதிப் போட்டிக்கு ரிசர்வ் டே
வருகிற ஜூன் 29ம் தேதி (சனிக்கிழமை) பார்படாஸில் உள்ள கென்சிங்டன் ஓவலில் டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் நிலையில், அடுத்த 2 நாட்கள் ரிசர்வ் நாளாக இருக்கும். இந்த இரண்டு நாட்களிலும் போட்டி மழை காரணமாக நடைபெற விட்டால் இறுதிப் போட்டியாளர்களை கூட்டு வெற்றியாளர்களாக ஐ.சி.சி அறிவிக்கும். இரு அணிக்கும் கோப்பையும், பரிசும் பகிர்ந்து அளிக்கப்படும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“