New Zealand vs Afghanistan | T20 World Cup 2024: 9-வது டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் கடந்த 2 ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் வெஸ்ட் இண்டீசில் உள்ள கயானாவில் இன்று நடைபெற்ற 14-வது லீக் ஆட்டத்தில் சி-பிரிவில் இடம் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் - நியூசிலாந்து அணிகள் மோதின.
மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங் செய்த நிலையில், பேட்டிங் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக தொடக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் 56 பந்துகளில் 5 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களுடன் 80 ரன்கள் எடுத்தார்.
இதனையடுத்து, 160 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர்களாக பின் ஆலென் மற்றும் டெவான் கான்வே ஆகியோர் களமிறங்கிய நிலையில், பின் ஆலென் டக்-அவுட் ஆகி வெளியேறினார். ஒரு பவுண்டரியை விரட்டிய கான்வே 8 ரன்னுக்கு அவுட் ஆகிய வெளியேறினார்.
அவரது விக்கெட்டுக்குப் பின் வந்த வீரர்கள் ஆப்கானிஸ்தானின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து அவுட் ஆகி பெவிலியனுக்கு நடையைக் கட்டினர். முன்னணி வீரர்களான கேப்டன் வில்லியம்சன் (9 ரன்), டேரில் மிட்செல் (5 ரன்), க்ளென் பிலிப்ஸ் (18 ரன்), சாம்ப்பென் (4 ரன்), பிரேஸ்வெல் (0 ரன்), சாண்ட்னெர் (4 ரன்), மேட் ஹென்றி (12 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.
முடிவில் நியூசிலாந்து அணி 15.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 75 ரன்னில் சுருண்டது. இதனால், ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆப்கானிஸ்தான் தரப்பில் ரஷித் கான், பசல்ஹக் பரூக்கி ஆகியோர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ரஷித் கான் சாதனை
நியூசிலாந்துக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ரஷித் கான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தியன் மூலம் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். அதாவது டி20 உலகக்கோப்பை வரலாற்றில் கேப்டனாக சிறந்த பந்துவீச்சை ரஷித் கான் இன்று பதிவு செய்துள்ளார். அவர் இன்று 4 ஓவரில் 17 ரன் மட்டும் விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக கயானாவில் நடந்த டி20 உலகக் கோப்பை போட்டியில் 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து, 2021 டி20 உலகக் கோப்பையில் 2வது இடம் பிடித்த அணி என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“