ஐசிசி டி20 உலககோப்பை தொடரில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி சூப்பர் 12 சுற்றில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் டி20 உலககோப்பை தொடரில் தற்போது சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19-வது லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா இங்கிலாந்து அணிகள் மோதியது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் போட்டியில் தோல்வியை சந்தித்த ஆஸ்திரேலியா அணி இந்த போட்டியில் கட்டாய வெற்றயை நோக்கி களமிறஙகியது.
அதே சமயம் அயர்லாந்து அணிக்கு எதிரான முதல் போட்டியில் வெற்றி பெற்ற இலங்கை அணி இந்த போட்டியில் 2-வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் ஆரோன் பின்ச் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 6 ரன்கள் எடுத்திருந்தபோது முதல் விக்கெட்டை இழந்தது. குஷால் மெண்டீஸ் 5 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டிசில்வா 26 பந்துகளில் 23 ரன்களும், தொடக்க வீரர் நிசங்கா 45 பந்துகளில் 40 ரன்களும் குவித்து ஆட்டமிழந்தனர். பின்னவர் வந்த வீரர்கள் ரன் குவிக்க தவறியதால் இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 157 ரன்கள் எடுத்தது.
அசலங்கா 25 பந்துகளில் 38 ரன்களும், கருணரத்னே 7 பந்துகளில் 14 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹேசில்வுட், கம்மின்ஸ், ஸ்டர்க், ஆக்கர், மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து 158 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணியில் தொடக்க வீரர் வார்னர், 11 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய மார்ஷ் 17 ரன்களிலும் அதிரடியாக விளையாடிய மேக்ஸ்வெல் 12 பந்துகளில் 2 பவுண்டரி 2 சிக்சருடன் 23 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய மார்க்கஸ் ஸ்டெயினிஸ் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். இதனால் ஆஸ்திரேலிய அணி எளிதில் வெற்றியை நோக்கி நகர்ந்தது.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டெயினிஸ் 17 பந்துகளில் அரைசதம் கடந்து டி20 உலககோப்பை தொடரில் குறைந்த பந்துகளில் அரைசதம் கடந்த வீரர் பட்டியலில் 2-வது இடம் பிடித்தார். 16.3 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
கடைசி வரை களத்தில் இருந்த ஸ்டெயினிஸ் 18 பந்துகளில் 4 பவுண்டரி 6 சிக்சருடன் 59 ரன்களுடனும், பின்ச் 42 பந்துகளில் 1 சிக்சருடன் 32 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். இந்த வெற்றியின் மூலம் ஏ பிரிவில் ஆஸ்திரேலிய அணி 4-வது இடத்தை பெற்றுள்ளது. தோல்வியடைந்தாலும் இலங்கை அணி 3-வது இடத்தில் உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“