டி20 உலகக் கோப்பையில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தி, குரூப் 2 பிரிவில் முதலிடம் பிடித்துள்ள இந்தியா அணி, அரையிறுதியில் இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்க்கும் டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியாவில் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. உலகக் கோப்பை லீக் போட்டிகள் சூப்பர் 12 சுற்றாக நடைபெற்றது. இதில் தலா 6 அணிகள் அடங்கிய 2 பிரிவுகளில் அணிகள் பங்கேற்றன.
இதில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, ஸ்ரீலங்கா, அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா 1 போட்டியில் மோதின.
இதேபோல் குரூப் 2 பிரிவில், இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, பங்களாதேஷ், நெதர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய அணிகள் தங்களுக்குள் தலா 1 போட்டியில் மோதின.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களைப் பெற்ற அணிகள் அரையிறுதிக்கு தகுதிப்பெற்றன. அந்த வகையில் குரூப் 1 பிரிவில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகளும், குரூப் 2 பிரிவில் இந்தியா, பாகிஸ்தான் அணிகளும் தகுதிப்பெற்றன.
இதையடுத்து அரையிறுதிப் போட்டிகள் நவம்பர் 9 மற்றும் 10 தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் முதல் அரையிறுதிப் போட்டியில், நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.
இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா அணி இங்கிலாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி அடிலெய்டில் நடைபெறுகிறது.
இதனிடையே அரை இறுதிப்போட்டிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் வெற்றிப் பெற்றால், 2007 உலகக் கோப்பை இறுதிப்போட்டி போல் இரு அணிகளும் இறுதிப்போட்டியில் மோதும் சூழல் உருவாகலாம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil