T20 World Cup Tamil News: 7வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இந்த தொடருக்கான 'சூப்பர்-12' ஆட்டங்கள் நடந்து வரும் நிலையில் குரூப்-1ல் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணி 4 புள்ளிகள் மற்றும் +3.614 ரன் ரேட்டுடன் முதலிடத்திலும், 2 புள்ளிகள் மற்றும் +0.583 ரன் ரேட்டுடன் இலங்கை அணி 2வது இடத்திலும் உள்ளன.
குரூப்-2 வை பொறுத்தவரை, 4 புள்ளிகள் மற்றும் +0.738 ரன் ரேட் பெற்றுள்ள பாகிஸ்தான் அணி முதலிடத்திலும், 2 புள்ளிகள் மற்றும் +6.500 ரன் ரேட் பெற்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி 2ம் இடத்திலும் உள்ளன. 'சூப்பர்-12' லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளை வீழ்த்திய பாகிஸ்தான் அணி அதன் அரையிறுதி வாய்ப்பை பிரகாச படுத்தியுள்ளது.
அரையிறுதி வாய்ப்பில் இந்தியா…
இந்த பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி உலக்கோப்பை தொடரில் முதல் முறையாக பாகிஸ்தான் அணியிடம் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எனினும், அந்த அணி அரையிறுதி வாய்ப்பை பெறும் அணிகளுடனான ரேஸில் உள்ளது. மேலும், அந்த அணி ஆப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, நமீபியா, நியூசிலாந்து ஆகிய அணிகளுடனான லீக் ஆட்டத்தில் வெற்றியை ருசிக்கும் பட்டசத்தில் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பை லாவகமாக பெறும். இதில் நியூசிலாந்து அணியுடனான லீக் ஆட்டம் வருகிற ஞாயிற்று கிழமை (அக்.31ம் தேதி) தொடங்குகிறது.
நியூசிலாந்தின் கை ஓங்குமா?
பந்துவீச்சு மற்றும் பேட்டிங்கில் வலுவான அணியாக தென்படும் நியூசிலாந்து அணியை அதன் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்டில் (17) மெச்சும் படியான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. டேரில் மிட்செல் (27 ரன்கள்) மற்றும் கேப்டன் கேன் வில்லியம்சன் (25 ரன்கள்) ஆறுதல் அளித்தனர். மிடில் - ஆடரில் டெவோன் கான்வே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அவுட் ஆகி இருந்தார். க்ளென் பிலிப்ஸ் மற்றும் ஜேம்ஸ் நீஷம் போன்றோரும் பெரிதாக ரன் ஏதும் சேர்க்கவில்லை.
எனினும்,பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணி சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியது. அந்த அணியின் டிம் சவுத்தி பாபர் அசாமின் விக்கெட்டை வீழ்த்தி ஆட்டத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தினார். இதேபோல் தொடக்க வீரர் முகமது ரிஸ்வானின் விக்கெட்டை கைப்பற்றி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தார் இஷ் சோதி. மிட்செல் சான்ட்னர், டிரெண்ட் போல்ட் ஆகியோரும் வலு சேர்த்தனர்.
எனவே அந்த அணி இதே உத்வேகத்துடன் இந்திய அணியை எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தொடக்க ஆட்டத்தில் தோல்வியை தழுவிய நியூசிலாந்து இந்த ஆட்டத்தில் வெற்றி பெற தீவிரம் காட்டும்.
பெரிய பின்னடைவு
நியூசிலாந்து அணியில் தொடக்க வீரர் மார்ட்டின் கப்தில் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் ஆகியோர் இந்தியாவுடனான ஆட்டத்தில் விளையாடமாட்டார்கள் என தெரிய வந்துள்ளது. இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.