Advertisment

'ஹாட்ரிக் சிக்ஸ்' பறக்க விட்ட மேத்யூ வேட்… இறுதிபோட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா…!

PAK vs AUS match highlights In tamil: டி20 உலகக்கோப்பை 2வது அரையிறுதியில் பாகிஸ்தானை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

author-image
WebDesk
New Update
T20 World Cup Tamil News: Matthew Wade come from behind to beat Pakistan

T20 World Cup Tamil News: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 7-வது டி20 உலகோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்றைய 2வது அரையிறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.

Advertisment

இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ ஜெயித்த ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பிஞ்ச் தயக்கமின்றி முதலில் பந்து வீச்சை தேர்ந்தெடுத்த நிலையில் பாகிஸ்தான் பேட்டிங் செய்ய களமிறங்கியது. கேப்டன் பாபர் அசாமும், விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வானும் அந்த அணிக்கு வலுவான தொடக்கம் கொடுத்தனர். இதில் பாபர் அசாம் 39 ரன்கள் (34 பந்து, 5 பவுண்டரி) சேர்ந்திருந்த நிலையில் ஆடம் ஜம்பாவின் சுழலில் வீழ்ந்தார்.

நடப்பு உலக கோப்பையில் 3-வது முறையாக அரைசதத்தை அடித்து அசத்திய ரிஸ்வான் 67 ரன்கள் (52 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசிய நிலையில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து நிலைத்து நின்று ஆடிய பஹார் ஜமான் 55 ரன்கள் (32 பந்து, 3 பவுண்டரி, 4 சிக்சர்) சேர்த்தது அவுட் ஆனார். இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. ஆஸ்திரேலிய தரப்பில் மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டையும், கம்மின்ஸ், ஆடம் ஜம்பா தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 177 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு நல்ல தொடக்கம் கிடைக்கவில்லை. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரரும், கேப்டனுமான ஆரோன் பிஞ்ச் (0) ஷகீன் ஷா அப்ரிடி வீசிய ஆக்ரோஷமான பந்தில் எல்.பி.டபிள்யூ. ஆனார். எனினும், டேவிட் வார்னர் - மிட்செல் மார்ஷ் ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இதில், மிட்செல் மார்ஷ் 28 ரன்களிலும் (3 பவுண்டரி, 1 சிக்சர்), அடுத்து வந்த ஸ்டீவன் சுமித் 5 ரன்னிலும், கிளைன் மேக்ஸ்வெல் 7 ரன்னிலும் ஷதப் கானின் சுழலில் சிக்கி நடையை கட்டினர். இவர்களுக்கு மத்தியில் போராடிக் கொண்டிருந்த டேவிட் வார்னர் (49 ரன், 30 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) தவறான அவுட்டுக்கு வெளியேறினார்.

இதனால் ஆஸ்திரேலியா 96 ரன்னுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது. பந்து வீச்சில் தொடர்ந்து மிரட்டி வந்த பாகிஸ்தான் அணி ஆட்டத்தை கட்டுக்குள் வைத்திருந்தது. இந்த சூழலில் களத்தில் இருந்த மார்கஸ் ஸ்டோனிஸ் - மேத்யூ வேட் ஜோடி சற்று மந்தமான ஆட்டத்தையே வெளிப்படுத்தியது. அவ்வப்போது சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை துரத்தி ரன்ரேட் அதிகமாக விடாமலும் கவனித்து வந்தது.

ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பரபரப்பான 19-வது ஓவரை வீசிய ஷாஹீன் அப்ரிடியின் 2வது பந்தில் மேத்யூ வேட் கொடுத்த கேட்ச் வாய்ப்பை ஹசன் அலி கோட்டை விட்டார். இது பாகிஸ்தானுக்கு பாதகமாக மாறிப்போக, அதே ஓவரின் 4வது பந்தில் மேத்யூ வேட் சிக்ஸர் அடித்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

தொடர்ந்து அப்ரிடி வீசிய அடுத்த 2 பந்துகளில் அடுத்தடுத்த சிக்ஸர்களை பறக்க விட்ட மேத்யூ வேட் ஹாட்ரிக் சிக்சருடன் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதனால் நடப்பு உலக கோப்பையில் தோல்வியே சந்திக்காமல் வீறுநடை போட்டு வந்த பாகிஸ்தானின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. அத்துடன் டி-20 கிரிக்கெட்டில் அமீரக மண்ணில் தொடர்ச்சியாக 16 ஆட்டங்களில் வெற்றிகண்டிருந்த பாகிஸ்தானின் அந்த சாதனை பயணத்துக்கும் ஆஸ்திரேலியா முற்றுப்புள்ளி வைத்தது.

துபாயில் நாளை மறுதினம் (ஞாயிற்று கிழமை - 14ம் தேதி) நடக்கும் உலகக்கோப்பைக்கான இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் யார் வெற்றி பெற்றாலும் அந்த அணிக்கு இது முதலாவது டி20 உலக கோப்பையாக இருக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Sports Cricket T20 Worldcup Pakistan Australia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment