கடைசி நிமிடம் வரை பரபரப்பை ஏற்படுத்திய, டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. 2-வது முறையாக டி20 கோப்பையை இந்திய அணி வென்றது.
இதைத் தொடர்ந்து கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். முன்னதாக, டி20 உலக கோப்பை தொடருடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து ஓய்வு பெறுவதாக ராகுல் டிராவிட் அறித்திருந்தார். அந்த வகையில் நேற்றுடன் அவரும் ஓய்வு பெற்றார். டி20 உலக கோப்பை வெற்றியுடன் 3 பேரும் சிறப்பான தருணத்தில் ஓய்வை அறிவித்துள்ளனர்.
வெற்றி பெற்றபின் பேசிய கேப்டன் ரோகித் சர்மா தனது ஓய்வு குறித்து அறிவித்தார். அப்போது பேசுகையில், "இது எனது கடைசி போட்டி. சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடைபெற இதை விட சிறந்த நேரம் இல்லை. இதன் ஒவ்வொரு தருணத்தையும் நான் விரும்பினேன். டி20 போட்டிகளில் இருந்து தான் இந்தியாவுக்காக எனது ஆட்டத்தை தொடங்கினேன், இதைத்தான் நான் விரும்பினேன், நான் உலகக் கோப்பையை வெல்ல விரும்பினேன், ”என்று ரோஹித் கூறினார்.
11 ஆண்டுகளுக்குப் பின் இந்தியா ஐ.சி.சி போட்டியில் மீண்டும் வெற்றி பெற்றது. உணர்ச்சி வசப்பட்டு பேசிய ரோஹித், “நான் மிகவும் உணர்ச்சிவசத்துடன் இருக்கிறேன். பேச வார்த்தைகள் இல்லை. எனது உணர்வுகளை வார்த்தைகளால் விளக்க முடியாது என்றார்.
37 வயதான ரோகித் சர்மா, கபில் தேவ் (1983) மற்றும் எம்.எஸ் தோனி (2007 மற்றும் 2011) ஆகியோருக்குப் பிறகு உலகக் கோப்பையை வென்ற மூன்றாவது இந்திய கேப்டன் ஆவார்.
ரோகித் சர்மா, இப்போது ஒரு அணியை 50 டி20 போட்டிகளுக்கு வழிநடத்திய முதல் கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான உலகக் கோப்பை இறுதிப் போட்டி 50வது போட்டியின் வெற்றியாகும். இந்த ஐ.சி.சி டி20 தொடரில் இந்திய அணி ஒரு போட்டிகளில் கூட தோல்வியடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரோகித் அறிவிப்புக்கு முன்னதாக, விராட் கோலி சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து விடை பெறுவதாக அறிவித்தார். “இது எனது கடைசி டி20 உலகக் கோப்பை, இந்த வெற்றியைத் தான் நாங்கள் அடைய விரும்பினோம். இது ஒரு சந்தர்ப்பம், இப்போது அல்லது ஒருபோதும் இதுபோன்ற சூழ்நிலை இல்லை, ”என்று இறுதிப் போட்டியில் ஆட்ட நாயகனாக இருந்த கோஹ்லி, போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியில் இருந்து நேற்றுடன் சிறப்பான வெற்றி உடன் ராகுல் டிராவிட் ஓய்வு பெற்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“