India vs Western Australia XI T20 World Cup 2022 Highlights – Suryakumar Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் வருகிற 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலிய மண்ணில் நடக்கிறது. மொத்தம் 16 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்தியா
இந்த உலககோப்பை தொடரில் இந்திய கிரிக்கெட் அணி அதன் முதல் போட்டியில் வருகிற 23 ஆம் தேதி பாகிஸ்தான் அணியுடன் மோதுகிறது. இப்போட்டி ஆஸ்திரேலியவின் மெல்போர்ன் மைதானத்தில் நடக்கிறது. வழக்கம் போல் இந்த போட்டிக்கு இருநாட்டு மற்றும் உலக கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
பயிற்சி ஆட்டம் – இந்தியா வெற்றி
ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி சில தினங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றது. தற்போது உலகக் கோப்பை தொடருக்காக தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறது. மேலும், ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணிகளுடன் பயிற்சி ஆட்டத்திலும் விளையாடி வருகிறது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவின் உள்நாட்டு அணியான மேற்கு ஆஸ்திரேலிய அணியுடன் இன்று பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 158 ரன்களை எடுத்ததது. இந்திய அணி தரப்பில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய சூர்யகுமார் யாதவ் 52 ரன்களும், ஹர்திக் பாண்டியா 29 ரன்களும் எடுத்தனர்.

தொடர்ந்து 159 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை துரத்திய மேற்கு ஆஸ்திரேலிய அணி 6 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 29 ரன்கள் மட்டும் எடுத்து தடுமாறியது. மேலும், இந்திய அணியின் பந்துவீச்சுக்கு தாக்குபிடிக்காத அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால், இந்திய அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் மேற்கு ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இந்திய அணி தரப்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்டுகளையும், யுஸ்வேந்திர சாஹல் மற்றும் புவனேஷ்வர் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர்.
ஆஸ்திரேலியாவிலும் ஃபார்மை தொடரும் சூரியகுமார்

இந்திய டி-20 அணியில் மிடில் -ஆடரில் களமாடும் சூரியகுமார் யாதவ் சமீபத்திய டி-20 தொடர்களில் அதிரடியாக விளையாடி வருகிறார். அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் நொறுக்கி அள்ளும் அவரது எக்ஸ்பேக்டர் பேட்டிங் இந்திய அணியின் பேட்டிங்கிற்கு கூடுதல் பலம் கொடுத்து வருகிறது. சமீபத்திதில் முடிவைடைந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி-20 ஆட்டங்களில் 59.50 சராசரியிலும் 195+ ஸ்ட்ரைக் ரேட்டிலும் விளையாடி இருந்த அவர் 119 ரன்கள் எடுத்திருந்தார். இதேபோல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர் 3 ஆட்டங்களில் 115 ரன்கள் குவித்து தொடர் நாயகன் விருதையும் தட்டிச் சென்றார்.

இந்த நிலையில், சூரியகுமார் யாதவ் தற்போது ஆஸ்திரேலிய மண்ணில் நடந்து வரும் பயிற்சி ஆட்டத்திலும் தனது சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார். இந்த ஆட்டத்தில் அரைசதம் விளாசிய அவர் 35 பந்துகளில் 3 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 52 ரன்கள் எடுத்து அசத்தியுள்ளார். அவரது அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil