AUS vs AFG T20 World Cup 2022 highlights in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக் முன்னேறும்.
நடப்பு டி20 உலக கோப்பையில் இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் நியூசிலாந்து அணி முதலாவது அணியாக அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
இந்த நிலையில், தொடரில் இன்று குரூப்1-ல் நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்தது.
அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க ஆப்கானிஸ்தான் அணியை அதிக ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தவேண்டும் என்பதால், தொடக்கத்தில் இருந்தே ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வந்தனர். ஆனால், அவர்கள் நினைத்தபடி அது நடக்கவில்லை.
ஆஸ்திரேலிய அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய கேமரூன் கிரீன் 3 ரன்னிலும், மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான டேவிட் வார்னர் 25 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் வந்த ஸ்டீவ் ஸ்மித 4 ரன்னில் ஆட்டமிழக்க, அவருடன் ஜோடியில் இருந்த மிட்சேல் மார்ஸ் 45 ரன்களில் அவுட் ஆனார். கடைசி வரை போராடி அணியின் ஸ்கோரை உயர்த்திய மேக்ஸ்வெல் 54 ரன்கள் எடுத்தார். இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது.
இதைத்தொடர்ந்து 169 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை ஆப்கானிஸ்தான் அணி துரத்தியது. அந்த அணியின் தொடக்க வீரர் உஸ்மான் வந்த வேகத்தில் 2 ரன்களில் அவுட் ஆகி வெளியேறினார். பின்னர் களத்தில் இருந்த ரஹ்மானுல்லா குர்பாஸ் இப்ராஹிம் சட்ரானுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 30 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.
தொடர்ந்து வந்த குல்புதின் 39 ரன்களிலும், பின்னர் வந்த கேப்டன் நபி 1 ரன்னிலும் அவுட்டாக ஆஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. அப்போது ஆப்கானிஸ்தான் 14.3 ஓவர்களில் 103 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து இருந்தது. அந்த தருணத்தில் களமிறங்கிய ரஷீத் கான் ஆட்டத்தின் போக்கை மாற்றும் விதமாக அடுத்தடுத்து பவுண்டரி சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால், ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு 22 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், கடைசி வரை களத்தில் இருந்த ரஷீத் கானல் 2 பவுண்டரி, ஒரு சிக்ஸரை மட்டுமே பறக்க விட முடிந்ததது. இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 7 விக்கெட்களை இழந்து 164 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி கண்டது. இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
ஆஸ்திரேலிய அணியினரை தனது அதிரடி ஆட்டத்தால் மிரட்டிய ரஷீத் கான் 23 பந்துகளில் 3 பவுண்டரிகள், 4 சிக்ஸர்கள் என 48 ரன்கள் குவித்தார். எனினும், அவரது போராட்டம் வீணாய் போனது.
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியை ருசித்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இருப்பினும், நாளை இலங்கை – இங்கிலாந்து அணிகள் போட்டியின் முடிவை பொறுத்து தான் ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறுமா? இல்லையா? என்பது முடிவாகும்.
இலங்கையைப் பொறுத்தவரை, நடப்பு உலகக் கோப்பையில் இருந்து அதிரகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
