T20 World Cup: ஆப்கான் வீரரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய அப்ரிடியின் மிரட்டல் யார்க்கர் - வீடியோ
பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் அப்ரிடி வீசிய யார்க்கர் ஆப்கான் வீரர் குர்பாஸின் இடது காலில் காயத்தை ஏற்படுத்திய நிலையில் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
Shaheen Shah Afridi's deadly yorker sends Afghanistan opener to hospital in T20 World Cup warm-up Tamil News
T20 World Cup - Afghanistan Pakistan; Warm-Up Match Tamil News: 8 – வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் அக்டோபர் 16-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமாடியுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
Advertisment
இதற்கிடையில், இந்த தொடரில் பங்கேற்கும் அணிகளுக்கு பயிற்சி ஆட்டங்களும் நடந்து வருகின்றன. அவ்வகையில், பாகிஸ்தான் அணிக்கு இரண்டு (இங்கிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பிரிஸ்பேனில் நேற்று முன்தினம் நடந்த முதலாவது பயிற்சி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் 2-வது மற்றும் கடைசி பயிற்சி ஆட்டத்தில் பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில் பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் நபி 51 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 155 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பாகிஸ்தான் அணி துரத்த களம் கண்டது. அந்த அணி 2.2 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்த நிலையில், மழை குறுக்கிட்டது. தொடர்ந்து மழை பெய்து வந்ததால் ஆட்டம் போட்டி ரத்து செய்யப்பட்டது.
ஆப்கான் வீரரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பிய அப்ரிடி: மிரட்டல் யார்க்கர் - வீடியோ
இந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஷஹீன் ஷா அப்ரிடி தனது மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். ஆப்கானிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் ஹஸ்ரதுல்லா ஜசாய் ஆகியோரின் விக்கெட்டுகளையும் வீழ்த்தினார். இதில், ரஹ்மானுல்லா குர்பாஸ் அப்ரிடி வீசிய யார்க்கருக்கு தாக்குப்பிடிக்கமால் எல்.பி.டபிள்யூ ஆகி ஆட்டமிழந்து வெளியேறினார்.
ஆனால், அப்ரிடி வீசிய யார்க்கர் குர்பாஸின் இடது காலில் காயத்தை ஏற்படுத்தியது. இதனால், அவரை பரிசோதிக்க பிசியோக்கள் மைதானத்திற்குள் வந்தனர். பின்னர், அவரை மாற்று பீல்டர் ஒருவர் மைதானத்திற்கு வெளியே கொண்டு சென்றார். குர்பாஸால் நடக்க முடியாத நிலையில், அவரை அந்த மாற்று பீல்டர் முதுகில் தூக்கி சென்றார்.
பின்னர், குர்பாஸை ஸ்கேன் செய்வதற்காக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அவரது காயம் குறித்த தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.