Adelaide Weather On 2nd November, IND Vs BAN, T20 World Cup 2022 Tamil News: 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், குழு-2ல் இடம்பிடித்துள்ள இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது. நேற்று தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டது. இதனால், புள்ளிப் பட்டியலில் இந்தியா அதே நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்தப் பட்டியலில் 5 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்க அணி முதலிடத்திலும், 4 புள்ளிகளுடன் வங்கதேச அணி 3வது இடத்திலும் உள்ளது. வங்கதேச அணியின் நெட் ரன்ரேட் (-1.533) இந்தியாவை (+0.844) விட குறைவு என்பதால், பட்டியலில் அந்த அணி இந்தியாவுக்கு கீழ் உள்ளது.
Touchdown Adelaide 📍 #TeamIndia | #T20WorldCup pic.twitter.com/l6GalMP0TI
— BCCI (@BCCI) October 31, 2022
இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு எப்படி?
இந்திய அணி தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி கண்டுள்ள நிலையில், அணி அரையிறுதிக்கு தகுதி பெற மீதமுள்ள 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதில், இந்தியா வருகிற புதன்கிழமை (நவம்பர் 2ம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து வங்க தேச அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியின் முடிவைப் பொறுத்து, புள்ளிப் பட்டியலில் 2வது இடம் பிடிக்கும் அணி எது? என்ற விபரம் தெரிந்து விடும்.

அடிலெய்டில் 95% சதவீதம் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், இந்தியா – வங்க தேச அணிகள் மோதும் ஆட்டம் நடக்கும் அடிலெய்டு மைதானத்தில் 95% சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு நாளைய தினம் முழுவதும் மழைக்கான வாய்ப்பு இருக்கும் என்பதால் இந்தியாவின் பயிற்சியே ஒட்டுமொத்தமாக பாதிக்கப்படலாம் என்றும், போட்டி நடைபெறும் நாளன்றும் மாலை நேரத்தில் 95% சதவீதம் மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, அடிலெய்டில் மைதானத்தில் தொடர்ந்து மழை பெய்து வந்தால் போட்டியில் முடிவே எட்டப்படாமல் போகலாம் என்பதும் தெரியவந்துள்ளது.

ஒருவேளை, இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைப்பிவிடப்படும் பட்சத்தில் இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு தலா ஒரு புள்ளி வழங்கப்படும். அதுபோல் நடந்தால், இவ்விரு அணிகளின் புள்ளிகளும் மீண்டும் சமநிலைக்கு வந்து விடும். இதனால், இந்த அணிகள் இரண்டும் மற்ற அணிகளின் முடிவுகளை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகும். எனினும், இந்தியாவின் நெட் ரன்ரேட் ப்ளஸில் (+) உள்ளதால், வங்க தேச அணியை விட இந்தியாவுக்கு அதிக வாய்ப்பு இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil