Dinesh Karthik avoids MAJOR INJURY, out of Bangladesh clash with back spasm, Rishabh Pant set to play at Adelaide TAMIL NEWS
8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குழு-2ல் இடம்பிடித்துள்ள இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது. இந்நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டது. இதனால், புள்ளிப் பட்டியலில் இந்திய அணி அதே நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
Advertisment
IND vs BAN: அடிலெய்டு வானிலை - லேட்டஸ்ட் அப்டேட்
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணி அதன் 4வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணியை நாளை புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது. போட்டி நடக்கும் அடிலெய்டில் இன்று காலை முதல் மழை பெய்து வருவதால் இந்திய வீரர்கள் யாரும் பயிற்சி செய்யவில்லை. மேலும், நாளை போட்டி நாளன்று 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"போட்டி நாளில் அதாவது நவம்பர் 2 ஆம் தேதி மீண்டும் மேகமூட்டத்துடன் காணப்படும். மிதமான (60%) மழைக்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் இரவில் இருக்கும். தென்மேற்கு திசையில் மணிக்கு 20 முதல் 30 கிமீ வேகத்தில் காற்று வீசும்." என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா
நடப்பு டி20 உலக கோப்பையில், குரூப் பி பட்டியலில் 5 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிக்க அணி முதலிடத்திலும், 4 புள்ளிகளுடன் வங்கதேச அணி 3வது இடத்திலும் உள்ளது. வங்கதேச அணியின் நெட் ரன்ரேட் (-1.533) இந்தியாவை (+0.844) விட குறைவு என்பதால், பட்டியலில் அந்த அணி இந்தியாவுக்கு கீழ் உள்ளது.
இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேற, அடுத்ததாக அந்த அணி ஆடும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்த நிலையில் தான், இந்திய அணி நாளை வங்கதேச அணியை எதிர்கொள்கிறது.
டி.கே-வுக்கு காயம்
இந்நிலையில், இந்திய நட்சத்திர வீரரும், விக்கெட் கீப்பருமான தினேஷ் கார்த்திக் காயம் காரணமாக விலகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது டைவ் அடித்த அவருக்கு முதுகில் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் ஆட்டத்தின் பாதியிலேயே அவர் பெவிலியனுக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு பதிலாக கடைசி 5 ஓவர்களில் ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்தார்.
“கார்த்திக் முதுகில் வலியை உணர்ந்தார். அவரது முதுகு பிடிப்பின் தீவிரத்தைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டதே இல்லை. வெப்ப சிகிச்சை மற்றும் மசாஜ் செய்வது அசௌகரியத்தை, விரைவாக குறைக்க உதவுவதால், மருத்துவக் குழுவினர் அவரைப் பொருத்தம் செய்து வருகின்றனர். எனவே அவரை இன்னும் ஒதுக்கிவிடாதீர்கள்,” என்று பிசிசிஐயின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டிக்கு பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் பேசிய வேகப்பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார், “அவருக்கு முதுகில் சில பிரச்சினைகள் இருந்தன, போட்டிக்குப் பிறகு நான் அவரைச் சந்திக்கவில்லை. நாங்கள் ஹோட்டலுக்குச் சென்று பிசியோவின் அறிக்கைக்காகக் காத்திருப்பதும் நான் அவருடன் பேசுவேன், ”என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் தினேஷ் கார்த்திக்கிற்கு நல்ல ஓய்வு தேவை என தெரிகிறது. இதனால், நாளை வங்கதேச அணியுடனான போட்டியில் ரிஷப் பண்ட் தான் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக களமாடுவார். இடதுகை பேட்ஸ்மேனான பண்ட்டை இடது - வலது காம்பினேஷனும் பயன்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
ஒருவேளை, தினேஷ் கார்த்திக் குணமடைந்து மீண்டு வந்தாலும், பண்ட் அணியின் உள்ளே வருவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. ஏனென்றால், தொடக்க வீரரான கே.எல்.ராகுல் இதுவரை நடந்த 3 ஆட்டங்களில் 4, 9 மற்றும் 9 என ரன்கள் எடுத்து சரியான தொடக்கம் கிடைக்காமல் திணறி வருகிறார். அவருக்கு மாற்று வீரராக பண்ட் ஓப்பனிங் பேட்ஸ்மேனாக கூட களமிறங்க வாய்ப்புள்ளது.