India vs Netherlands: Rishabh Pant - replace Hardik Pandya Tamil News: 8-வது டி20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 12 சுற்று போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில், கிரிக்கெட்டில் பரம போட்டியாளரான பாகிஸ்தானை கடந்த ஞாயிற்று கிழமை மெல்போர்னில் எதிர்கொண்டது. இந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இந்தியா vs நெதர்லாந்து
பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு, இந்திய அணி நாளை சிட்னியில் நடைபெறும் ஆட்டத்தில் நெதர்லாந்து அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியானது நாளை மதியம் 12.30 மணிக்கு தொடங்க உள்ளது.
ஹர்திக் பாண்டியா ஃபிட்னஸ் அப்டேட்
பாகிஸ்தானுக்கு எதிராக விராட் கோலியுடன் முக்கியமான பார்ட்னர்ஷிப்பில் 40 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் உடற்தகுதி குறித்து தற்போது சந்தேகம் எழுந்தது வருகிறது. 160 ரன்கள் கொண்ட இலக்கை இந்திய அணி துரத்துகையில், இறுதி ஓவரில் பேட்டிங் செய்யும் போது பாண்டியாவுக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், 'ஹர்டிக் பாண்டியா விளையாடுவதற்கு தகுதியானவர். அவருக்கு ஓய்வு கொடுப்பது குறித்து இந்தியா பரிசீலிக்கவில்லை என்றும், அவர் அனைத்து ஆட்டங்களிலும் விளையாட விரும்புகிறார் என்றும் இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மாம்ப்ரே தெரிவித்துள்ளார்.
"அவர் <பாண்டியா> நன்றாக இருக்கிறார். விளையாடுவதற்குத் தகுதி பெற்றுள்ளார். அவருக்கு ஓய்வெடுப்பது குறித்து நாங்கள் பரிசீலிக்கவில்லை. அவரே எல்லா ஆட்டங்களிலும் விளையாட விரும்புகிறார். அவர் ஒரு முக்கியமான வீரர். அணியில் சமநிலையைச் சேர்ப்பவர். ஆம், விராட் ஆட்டத்தை முடித்தார், ஆனால் எங்களுக்குத் தெரிந்த ஒரு அனுபவமிக்க வீரர் தேவை. நாங்கள் விளையாட்டை ஆழமாக எடுத்துக் கொண்டால் என்ன நடக்கும்," என்று மாம்ப்ரே கூறியுள்ளார்.
ரிஷப் பாண்ட் ஆட வாய்ப்பு
இருப்பினும், நேற்று செவ்வாய்க்கிழமை சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் (எஸ்சிஜி) இந்தியாவின் விருப்பப் பயிற்சி அமர்வில் ஹர்திக் இல்லை. இதேபோல், சூர்யகுமார் யாதவ், இடது கை சுழற்பந்து வீச்சாளர் அக்சர் படேல் மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் - முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், மற்றும் புவனேஷ்வர் குமார் போன்றோரும் பங்கேற்கவில்லை. இவர்களைத் தவிர மற்ற வீரர்கள் பங்கேற்று இருந்தார்கள்.
இந்நிலையில், ரிஷப் பண்ட் 5வது இடத்தில் ஹர்டிக் பாண்டியாவுக்கு பதிலாக அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. டைனமிக் விக்கெட் கீப்பர்-பேட்டரான அவர் தனது பேட்டிங் பாணியில் கடுமையான பயிற்சியை மேகொண்டு வருகிறார். இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோரின் நெருக்கமான கண்காணிப்பில் இருந்து வரும் அவர், வலை பயிற்சியில் ஈடுபடும் போது விக்ரம் ரத்தோ "ஷாட், ரிஷப்" என்று அடிக்கடி குறிப்பிட்டார்.
நெதர்லாந்து அணியில் இடது கை சுழற்பந்துவீச்சாளர் டிம் பிரிங்கிள் மற்றும் லெக் ஸ்பின்னர் ஷரிஸ் அகமது ஆகியோர் உள்ளனர். பண்ட் விளையாடுவது மிடில் ஆர்டரில் ஒரு இடது கை வீரர் வேண்டும் என்ற நீண்ட கால தேடலை தணிக்கும். மேலும், பாகிஸ்தானுக்கு எதிராக மிடில்-ஆடர் சரிந்த நிலையில், பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா பண்ட் ஆடும் லெவனில் இடம் பிடிப்பது குறித்து யோசிப்பார்கள். இதேபோல், அக்சர் படேலுக்குப் பதிலாக லெக் ஸ்பின்னர் யுஸ்வேந்திர சாஹலை களமிறக்குவது குறித்தும் யோசிக்க வாய்ப்புள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.