INDIA vs ZIMBABWE T20 world cup match score updates: உலகக் கோப்பை டி20 போட்டிகளின் சூப்பர் 12 சுற்றில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் 186 ரன்களை குவித்த இந்திய அணி, 115 ரன்களுக்குள் ஜிம்பாப்வே அணியை மடக்கி அபார வெற்றி பெற்றுள்ளது.
உலகக் கோப்பை டி20 போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றின் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகள் மோதுகின்றன. இந்திய அணி ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதிப் பெற்றுள்ள நிலையில், இன்றைய ஆட்டத்திலும் அபார வெற்றியை நோக்கி விளையாடி வருகிறது. இந்திய அணி பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தோல்வியைத் தவிர, இந்திய அணி இந்த உலகக் கோப்பையில் சிறப்பாகவே விளையாடி வருகிறது.
அதேநேரம், ஜிம்பாப்வே அணி அரையிறுதிக்கு தகுதி பெறவில்லை என்றாலும், இந்த உலகக் கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்துள்ளது. பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஜிம்பாப்வேயின் வரலாற்று சிறப்புமிக்க வெற்றி அதற்கு சான்றாகும். எனவே இன்றைய போட்டியில் இந்திய அணிக்கு ஜிம்பாப்வே அணி கடும் சவால் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இரு அணி விளையாடும் வீரர்கள் விவரம்:
இந்தியா : கேஎல் ராகுல், ரோஹித் சர்மா(கேப்டன்), விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரிஷப் பந்த்(விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங்
ஜிம்பாப்வே : வெஸ்லி மாதேவெரே, கிரேக் எர்வின்(கேப்டன்), ரெஜிஸ் சகப்வா(விக்கெட் கீப்பர்), சீன் வில்லியம்ஸ், சிக்கந்தர் ராசா, டோனி முனியோங்கா, ரியான் பர்ல், டெண்டாய் சதாரா, ரிச்சர்ட் நகரவா, வெலிங்டன் மசகட்சா, பிளஸ்சிங் முசரபன்
இந்தியா பேட்டிங்
இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ராகுல் மற்றும் ரோகித் களம் இறங்கினர். ராகுல் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார். மறுமுனையில் ஆடிய ரோகித் 15 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய கோலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இருப்பினும் கோலி 26 ரன்களில் அவுட் ஆனார். அடுத்து சூர்யகுமார் களமிறங்கி ஜிம்பாப்வே பவுலர்கள் வெளுத்து வாங்கினார்.
இதற்கிடையில் அற்புதமாக ஆடி அரை சதம் அடித்த ராகுல் அவுட் ஆனார். ராகுல் 35 பந்தில் 51 ரன்கள் அடித்தார். இதில் 3 சிக்சர்கள் மற்றும் 3 பவுண்டரிகள் அடங்கும். அடுத்து களமிறங்கிய பண்ட் 3 ரன்களில் வெளியேறினார். இதனால் இந்திய அணி 101 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்தது. அடுத்து களமிறங்கிய பாண்டியா பொறுப்பாக கம்பெனி கொடுக்க, ஜிம்பாப்வே பந்து வீச்சை நொறுக்கினார் சூர்யகுமார். பாண்டியா கடைசி ஓவரில் 18 ரன்களில் அவுட் ஆனார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சூர்யகுமார் 25 பந்துகளில் 61 ரன்களை விளாசினார். இதில் 4 சிக்சர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் அடங்கும்.
இதனையடுத்து இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஜிம்பாப்வே தரப்பில் வில்லியம்ஸ் 2 விக்கெட்களையும், ராசா, நகரவா, முசரபானி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினார்.
ஜிம்பாப்வே பேட்டிங்
ஜிம்பாப்வே அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக வெஸ்லி மாதேவெரே, கிரேக் எர்வின் களமிறங்கினர். ஆட்டத்தின் முதல் பந்திலே மாதேவெரே அவுட் ஆனார். அடுத்து களமிறங்கிய ரெஜிஸ் சகப்வா 6 பந்துகளைச் சந்தித்து டக் அவுட் ஆனார். இதனால் ஜிம்பாப்வே அணி 2 ரன்களுக்கு 2 விக்கெட்களை இழந்து தடுமாறியது. பின்னர் ஜோடி சேர்ந்த எர்வின் மற்றும் சீன் வில்லியம்ஸ் நிதானமாக ஆடி ரன் குவித்தனர். ஜிம்பாப்வே 28 ரன்கள் சேர்த்தபோது வில்லியம்ஸ் 11 ரன்களில் அவுட் ஆனார். சிறிது நேரத்திலே எர்வின் 13 ரன்களில் அவுட் ஆனார்.
அடுத்து களமிறங்கிய சிக்கந்தர் ராசா சிறப்பாக ஆட, மறுமுனையில் இறங்கிய டோனி முனியோங்கா 5 ரன்களில் அவுட் ஆனார். இதனால் ஜிம்பாப்வே அணி 36 ரன்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது.
பின்னர் ஜோடி சேர்ந்த ராசா மற்றும் ரியான் பர்ல் அற்புதமாக ஆடி ரன்களை குவித்தனர். இருவரும் 60 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் சேர்த்த நிலையில் பர்ல் 35 ரன்களில் அவுட் ஆனார். பர்ல் 22 பந்தில் 1 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார். அடுத்து வந்த வெலிங்டன் மசகட்சா மற்றும் ரிச்சர்ட் நகரவா தலா 1 ரன்னில் அவுட் ஆகினர். அடுத்ததாக டெண்டாய் சதாரா களமிறங்கிய நிலையில், ராசா 34 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் பிளஸ்சிங் முசரபன் களமிறங்கிய சிறிது நேரத்திலே சதாரா அவுட் ஆனார்.
இதனையடுத்து ஜிம்பாப்வே அணி 17.2 ஓவர்களில் 115 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியை தழுவியது. இந்திய அணி 71 ரன்களில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி தரப்பில், அஸ்வின் 3 விக்கெட்களையும், ஷமி மற்றும் பாண்டியா தலா 2 விக்கெட்களையும், அர்ஷ்தீப், புவனேஷ்வர், அக்சர் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil