T20 World Cup 2022 Tamil News: 8 – வது டி 20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று முதல் (அக்டோபர் 16-ம் தேதி ) ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்த தொடரில் மொத்தம் 16 அணிகள் களமிறங்குகின்றன. இத்தொடரில், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன.
தகுதிச் சுற்று – சூப்பர் 12 ஆட்டங்கள்
நடப்பு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் நேற்று தகுதிச் சுற்றுடன் தொடங்கிய நிலையில், இந்த தகுதிச் சுற்றில் மொத்தம் 8 அணிகள் களம் கண்டுள்ளன. இவை குரூப் – ஏ, குரூப் – பி என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் குரூப் – ஏ- வில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும், குரூப் – பி-யில் வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதாவது சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 12 சுற்றில், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுடன் தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற ஏ1 மற்றும் பி2 அணிகளும் இடம்பிடிக்கும். இதேபோல் குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் ஏ2 மற்றும் பி1 அணிகளும் இடம்பிடிக்கும்.
சூப்பர் 12 சுற்றின் போது, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும். எனவே, ஒவ்வொரு அணியும் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
நமீபியாவின் வெற்றி இந்தியாவுக்கு ஆபத்து: ஏன், எப்படி?
இந்நிலையில், தகுதிச் சுற்று ஆட்டத்தில் நமீபியாவின் வெற்றி இந்தியாவின் டி20 உலகப் கோப்பைக்கான பாதையை கடினமாக்கியிருக்கிறது. அது எப்படி என்று இங்கு பார்க்கலாம்.
நமீபியா குரூப் – ஏ பிரிவில் இடம்பிடித்துள்ளது. அந்த அணி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டத்தில் ஆசிய கோப்பை சாம்பியனான இலங்கை அணியை 55 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இலங்கை அணியின் இந்த தோல்வி அந்த அணியை சூப்பர் 12 சுற்றில் இந்தியா இடம்பிடித்துள்ள குரூப் 2ல் இடம் பிடிக்க செய்ய வாய்ப்புள்ளது.
எனினும், இலங்கை அணி மீதமுள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய இரு அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டும். அதன்படி அந்த அணி வெற்றி பெற்றால் குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடிக்கும். அது இலங்கை அணியை இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ள குழுவில் சேர்க்கும்.
இலங்கை அணி இந்த குழுவில் சேரும்போது அது இந்தியாவுக்கு பெரும் தலைவலியாக இருக்கும். ஏன்னென்றால், இந்த குழுவில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணியே அரையிறுதிக்கு தகுதி பெறும். அப்படி தகுதி பெற இலங்கை இந்தியாவுக்கு முட்டுக்கட்டை போடும். சமீபத்தில் நடந்த முடிந்த ஆசிய கோப்பையில் இந்திய அணி இலங்கையிடம் தோற்றது. இந்தியா மீதான இலங்கையின் வெற்றி அந்த அணிக்கு கூடுதல் உத்வேகம் கொடுக்கும்.
Namibia's special performance is being lauded by the cricketing fraternity 👏
— ICC (@ICC) October 16, 2022
More 👉 https://t.co/AWWIfHW4AC#SLvNAM | #T20WorldCup pic.twitter.com/iS9k4DY5OB
இலங்கை அணி இடம்பிடித்துள்ள குரூப் ஏ பிரிவில், இலங்கையை வீழ்த்திய நமீபியா நல்ல நிலையில் உள்ளது. நெதர்லாந்து அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய இரு அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் ஒன்றில் வெற்றி பெற்றால், அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
அதேவேளையில், மற்றொரு குரூப் ஏ ஆட்டத்தில் நெதர்லாந்து அணி ஒரு பந்து மீதமிருக்க மூன்று விக்கெட் வித்தியாசத்தில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை வீழ்த்தியது. அந்த அணி இலங்கை அல்லது நமீபியாவுக்கு எதிரான ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றால் சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியாவின் குழுவில் இடம்பிடிக்கும் மற்றொரு அணி எது?
மறுபுறம், குரூப் – பி யில் இரண்டு முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே, அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த அணியில் பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணி இந்தியாவின் குழுவில் இடம் பிடிக்கும்.
இன்று வெஸ்ட் இண்டீஸ் – ஸ்காட்லாந்து அணிகள் மோதிய ஆட்டத்தில் ஸ்காட்லாந்து அணி 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதேபோல், இன்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் அயர்லாந்து – ஜிம்பாப்வே அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணி 31 ரன்கள் வித்தியசத்தில் வென்றது.
#ExpressSports | #SportsUpdate || டி20 உலகக் கோப்பை: முதல் சுற்று ஆட்டத்தின் 3வது போட்டியில் வெஸ்ட் இண்டீசை 42 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஸ்காட்லாந்து.https://t.co/gkgoZMqkWC | #WIvsSCO | #WestIndies | #Scotland pic.twitter.com/gng37NKYoH
— Indian Express Tamil (@IeTamil) October 17, 2022
நாளை மறுநாள் புதன்கிழமை வெஸ்ட் இண்டீஸ் அணி ஜிம்பாப்வேயையும் வெள்ளிக்கிழமை அயர்லாந்தையும் எதிர்கொள்கிறது. அந்த அணி சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேற மீதமுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற வேண்டியது அவசியாகும்.
வரவிருக்கும் போட்டிகள்:
அக்டோபர் 17: ஸ்காட்லாந்து vs வெஸ்ட் இண்டீஸ்; அயர்லாந்து vs ஜிம்பாப்வே
அக்டோபர் 18: நமீபியா vs நெதர்லாந்து; இலங்கை vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
அக்டோபர் 19: அயர்லாந்து vs ஸ்காட்லாந்து; வெஸ்ட் இண்டீஸ் vs ஜிம்பாப்வே
அக்டோபர் 20: நெதர்லாந்து vs இலங்கை; நமீபியா vs ஐக்கிய அரபு எமிரேட்ஸ்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil