8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா மண்ணில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், தொடருக்கான அரையிறுதி ஆட்டங்கள் நடக்கவுள்ளன. நாளை புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து, நாளை மறுநாள் வியாழக்கிழமை நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
தென் ஆப்பிரிக்கா அதிர்ச்சி தோல்வி… அரையிறுதிக்குள் நுழைந்த பாகிஸ்தான்
முன்னதாக, நடப்பு டி20 உலகக்கோப்பை சூப்பர் 12 லீக் சுற்றில் நேற்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியால் தென் ஆப்பிரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது.
இந்நிலையில், பாகிஸ்தான் – வங்க தேசம் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி நேற்று அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதி தகுதி பெற்றது. இதனால், ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் நான்காவது அணியாக இணைந்துள்ளது.
நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகளில், நியூசிலாந்து இதுவரை ஒயிட் பால் வடிவங்களில் ஐசிசி உலக பட்டங்களை வென்றதில்லை. அதேவேளையில், 1992 ஆம் ஆண்டு நடந்த ஒருநாள் (50 ஓவர்) உலகக் கோப்பை மற்றும் 2009 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்றுள்ளது.
இந்த நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பை தொடருக்கான அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் சிட்னியில் பலப்பரீட்சை நடத்துகின்றன. அதன்படி, சிட்னி நகரின் வானிலை, பிட்ச் ரிப்போர்ட் போன்ற சில அத்தியாவசியத் தகவல்கள் இங்கு நாங்கள் வழங்கியுள்ளோம்.
- சிட்னி வானிலை முன்னறிவிப்பு
சிட்னியில் புதன்கிழமை (நவம்பர் 9) வானிலை 21 முதல் 14 டிகிரி வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் வடக்கு திசை காற்று மணிக்கு 20 கிமீ வேகத்தில் வீசும் என்றும், மழைக்கு 20 சதவீதம் வாய்ப்பு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை பொழிவு போட்டிக்கு தீங்கு விளைவிக்கும் அளவுக்கு இருக்காது. எனினும் அதிகபட்சமாக சில சிறிய தாமதங்களை நாம் காணலாம்.
- சிட்னி ஆடுகளம் எப்படி?

சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் ஆரம்ப கட்டத்தில் பேட்டர்களுக்கு சில உதவிகளை வழங்குகிறது. சுழலுக்கும் நன்கு ஒத்துழைக்கிறது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னர், பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் உள்ளனர். எனவே, போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

- இறுதிப்போட்டி வாய்ப்பு
இந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி நவம்பர் 13-ம் தேதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு முன்னேறும். அந்த ஆட்டத்தில் இந்தியா அல்லது இங்கிலாந்தை எதிர்கொள்ளும்.
- இரு அணி வீரர்கள் பட்டியல் பின்வருமாறு:
நியூசிலாந்து:

கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாக்கி பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், ஃபின் ஆலன்.
பாகிஸ்தான்:

பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, மாஸ் ஷா அப்ரிடி . காத்திருப்பு வீரர்கள்: உஸ்மான் காதர், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil