T20 World Cup 2022 – Pakistani actress Sehar Shinwari Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.
டி-20 உலக கோப்பை 2022: அரையிறுதி வாய்ப்புகள்
அந்த வகையில், குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுடன் தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளன. இதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.

இதில், குரூப் 1ல் ஆப்கானிஸ்தான் அணியை தவிர்த்து, மற்ற எல்லா அணிகளுக்கும் இடையேயும் கடுமையான போட்டி நிலவுகிறது. குரூப் 2ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளது. இந்தப் பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணிக்கு இன்னும் ஒரு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அந்த ஆட்டத்தில் அந்த அணி ஜெயித்தாலும் மற்ற அணிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.
டி-20 உலக கோப்பை: இந்தியாவின் அரையிறுதி வாய்ப்பு

இந்திய அணிக்கான அரையிறுதி வாய்ப்பை பொறுத்தவரை, கடந்த புதன் கிழமை வங்க தேச அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா வென்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 6 புள்ளிகளுடனும், + 0.730 நெட் ரன்ரேட்டுடனும் இந்தியா வலுவான நிலையில் உள்ளது. இந்திய அணி அரையிறுதி வாய்ப்பை உறுதி செய்ய, வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 06), மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றியைப் பதிவு செய்ய வேண்டும்.
சவால் விட்ட பாகிஸ்தான் நடிகை
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் இந்தியா தோல்வியடைய வேண்டும் என்று ட்வீட் செய்துள்ள பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி, ஜிம்பாப்வே அணி இந்தியாவை தோற்கடித்தால், ‘ஜிம்பாப்வே பையனை’ திருமணம் செய்து கொள்வேன் என்று சவால் விட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை வங்க தேசத்திற்கு எதிரான இந்தியாவின் போட்டியின் போது, இந்தியா தோல்வியடைய வேண்டும் என்று விரும்பி பாகிஸ்தான் ரசிகர்கள் தொடர்ந்து டிவீட் செய்து வந்தார்கள். அப்போது ட்வீட் செய்த பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி, தனது ட்விட்டர் பக்கத்தில், “அடுத்த போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்தியாவை அற்புதமாக வீழ்த்தினால் நான் ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்து கொள்வேன்” என்று பதிவிட்டுள்ளார். தற்போது இணையவாசிகள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வரும் இந்த டிவீட் பல லைக்குகளையும், ரீடிவீட்களையும் பெற்று வருகிறது.
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
யார் இந்த செஹர் ஷின்வாரி?
நடிகை செஹர் ஷின்வாரி பாகிஸ்தானின் ஐதராபாத் நகரில் பிறந்தவர். இவர் கோஹாட் பகுதியைச் சேர்ந்த ஷின்வாரி பழங்குடியினத்தைச் சேர்ந்தவர். மேலும், இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு ‘ஷேர் சாவா ஷேர்’ என்ற நகைச்சுவைத் தொடரின் மூலம் தனது நடிப்பைத் தொடங்கினார். தற்போது, டிக்டாக் மற்றும் இன்ஸ்டாகிராமில் பிரபலமானவராகவும் இவர் வலம் வருகிறார். அவரை இன்ஸ்டாகிராமில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடர்கிறார்கள் .

நடிகை செஹர் ஷின்வாரி, இதற்கு முன் தனது காதலை வெளிப்படையாக வெளிப்படுத்தினார். அந்த பதிவில் அவர், நியூசிலாந்து ஆல்-ரவுண்டர் ஜேம்ஸ் நீஷமுக்காக ‘எதிர்காலத்தில் என் குழந்தைக்கு நீங்கள் தந்தையாக விரும்புகிறீர்களா ஜிம்மி’ என்றும், மற்றொரு ட்வீட்டில், ‘ஜிம்மி ஐ லவ் யூ’ என்று கூறி பதிவிட்டிருந்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil