Pakistan vs New Zealand {PAK vs NZ } T20 world cup Semi final match 2022 Live Streaming | பாகிஸ்தான் vs நியூசிலாந்து {PAK vs NZ } டி20 உலகக்கோப்பை அரையிறுதிபோட்டி 2022 நேரடி ஒளிபரப்பு: ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் 8வது டி20 உலகக் கோப்பை (டி20 உலகக் கோப்பை 2022) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான சூப்பர் 12 சுற்றின் முடிவில் குரூப்1-ல் முதல் இரு இடங்களை பிடித்த நியூசிலாந்து (7 புள்ளி), இங்கிலாந்து (7 புள்ளி), குரூப்2-ல் டாப்-2 இடங்களை பெற்ற இந்தியா (8 புள்ளி), பாகிஸ்தான் (6 புள்ளி) ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளன. குரூப்1ல் இடம் பிடித்த நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணி 7 புள்ளிகள் பெற்ற போதிலும் ரன்ரேட்டில் பின்தங்கியதால் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
இந்நிலையில், நடப்பு டி20 உலகக் கோப்பையில் சிட்னியில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி, பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்: இரு அணிகள் கடந்து வந்த பாதை
இந்த உலகக் கோப்பை தொடரில் நடந்த சூப்பர்12 சுற்றில் ஆஸ்திரேலியா, இலங்கை, அயர்லாந்து அணிகளை வீழ்த்திய நியூசிலாந்து அணி இங்கிலாந்திடம் மட்டும் தோல்வி கண்டது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அந்த அணி களமிறங்கிய ஆட்டம் மழையின் குறுக்கீட்டால் கைவிடப்பட்டது.
அதே சமயம் முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி இந்தியா, ஜிம்பாப்வேயிடம் அடுத்தடுத்து தோல்வியை தழுவி, அதன் பிறகு நெதர்லாந்து, தென்ஆப்பிரிக்கா, வங்காளதேச அணிகளை சாய்த்து சரிவில் இருந்து மீண்டது. நெதர்லாந்து அணி அதன் கடைசி லீக்கில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியதன் பலனாக பாகிஸ்தானுக்கு அரைஇறுதி அதிர்ஷ்டம் அடித்தது.
கடந்த மாதம் நியூசிலாந்தில் நடந்த முத்தரப்பு டி-20 தொடரின் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை தோற்கடித்தது. அந்த வெற்றி பாகிஸ்தானுக்கு அசாத்திய நம்பிக்கை கொடுத்துள்ளது. இதுவரை ஒருநாள் மற்றும் டி20 உலக கோப்பையை வெல்லாத நியூசிலாந்து அணிக்கு, அந்த கனவை அடைவதற்கான முதற்படி இன்றைய ஆட்டமாகும். மொத்தத்தில், சமபலம் கொண்ட இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்: நேருக்கு நேர்
பாகிஸ்தான், நியூசிலாந்து அணிகள் டி20 கிரிக்கெட்டில் 28 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் 11-ல் நியூசிலாந்தும், 17-ல் பாகிஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.
உலகக் கோப்பை அரையிறுதியைப் பொறுத்தவரை, நியூசிலாந்து அணி இதுவரை ஒரு போட்டியில் கூட பாகிஸ்தானை வென்றதில்லை. கடந்த 1992, 1999, 2007 ஆகிய மூன்று போட்டிகளில் பாகிஸ்தான் அணிதான் வெற்றி பெற்றது.
சிட்னி ஆடுகளம் எப்படி?
சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் ஆடுகளம் ஆரம்ப கட்டத்தில் பேட்டர்களுக்கு சில உதவிகளை வழங்குகிறது. சுழலுக்கும் நன்கு ஒத்துழைக்கிறது. நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளிலும் உலகத்தரம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் உள்ளனர்.
நியூசிலாந்து அணியில் இஷ் சோதி மற்றும் மிட்செல் சான்ட்னர், பாகிஸ்தான் அணியில் ஷதாப் கான் மற்றும் முகமது நவாஸ் ஆகியோர் உள்ளனர். எனவே, போட்டியில் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமிருக்காது. நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து: டி20 உலகக் கோப்பை, முதல் அரையிறுதி எப்போது நடைபெறும்?
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி நவம்பர் 9 புதன்கிழமை நடைபெறவுள்ளது.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து: டி20 உலகக் கோப்பை, முதல் அரையிறுதி எங்கே நடைபெறும்?
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து: T20 உலகக் கோப்பை, 1வது அரையிறுதி எந்த நேரத்தில் தொடங்கும்?
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி இந்திய நேரப்படி மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து: T20 உலகக் கோப்பை, 1வது அரையிறுதியை எந்த சேனல்கள் ஒளிபரப்பும்?
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டிகள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்படும்.
பாகிஸ்தான் vs நியூசிலாந்து: டி20 உலகக் கோப்பை, முதல் அரையிறுதி லைவ் ஸ்ட்ரீமிங்கிற்கு எங்கே பார்க்கலாம்?
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் அரையிறுதி போட்டிகள் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் லைவ் ஸ்ட்ரீமிங்கிற்குக் கிடைக்கும்.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்: இரு அணி வீரக்கள் பட்டியல்
நியூசிலாந்து:
கேன் வில்லியம்சன் (கேப்டன்), டிம் சவுத்தி, இஷ் சோதி, மிட்செல் சான்ட்னர், க்ளென் பிலிப்ஸ், ஜிம்மி நீஷம், டேரில் மிட்செல், ஆடம் மில்னே, மார்ட்டின் கப்டில், லாக்கி பெர்குசன், டெவோன் கான்வே, மார்க் சாப்மேன், மைக்கேல் பிரேஸ்வெல், ஃபின் ஆலன்.
பாகிஸ்தான்:
பாபர் அசாம் (கேப்டன்), ஷதாப் கான், ஆசிப் அலி, ஃபகார் ஜமான், ஹைதர் அலி, ஹரிஸ் ரவூப், இப்திகார் அகமது, குஷ்தில் ஷா, முகமது ஹஸ்னைன், முகமது நவாஸ், முகமது ரிஸ்வான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷஹீன் ஷா அப்ரிடி, மாஸ் ஷா அப்ரிடி . காத்திருப்பு வீரர்கள்: உஸ்மான் காதர், முகமது ஹாரிஸ், ஷாநவாஸ் தஹானி.
நியூசிலாந்து vs பாகிஸ்தான்: இரு அணிகளின் உத்தேச வீரர்கள் பட்டியல்
நியூசிலாந்து: பின் ஆலென், டிவான் கான்வே, வில்லியம்சன் (கேப்டன்), கிளென் பிலிப்ஸ், டேரில் மிட்செல், ஜேம்ஸ் நீஷம், மிட்செல் சான்ட்னெர், டிம் சவுதி, டிரென்ட் பவுல்ட், சோதி, லோக்கி பெர்குசன்.
பாகிஸ்தான்: முகமது ரிஸ்வான், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ஹாரிஸ், ஷான் மசூத், இப்திகர் அகமது, முகமது நவாஸ், ஷதப் கான், முகமது வாசிம், நசீம் ஷா, ஷகீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil