T20 World Cup 2022: Pakistan’s Semi-final Qualification Scenario Tamil News: 8-வது டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், குழு-2ல் இடம்பிடித்துள்ள இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது. பின்னர் கடந்த ஞாயிற்று கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டது.
இந்நிலையில், இந்திய அணி நேற்று அதன் 4வது லீக் ஆட்டத்தில் வங்க தேச அணியை எதிர்கொண்டது. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டிஎல்எஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது. இதனால், புள்ளிப் பட்டியலில் நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் இருந்த இந்திய அணி தற்போது 6 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், + 0.730 என்ற நெட் ரன்ரேட்டுடன் உள்ள இந்தியாவின் அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பும் பிரகாசமாகியுள்ளது.

பாக்,. வயிற்றில் புளியைக் கரைத்த இந்தியாவின் வெற்றி
நடப்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணி தொடர்ந்து 2 வெற்றியை ருசித்தது. ஆனால், தென்ஆப்ரிக்காவிடம் சற்று தடுமாறியது. பிறகு, வங்க தேச அணிக்கு எதிரான நேற்றையை ஆட்டத்தில் மீண்டும் வெற்றியை சுவைத்தது. இந்த வெற்றி இந்தியாவுக்கு பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. இதற்கு இணையாக, இந்த முடிவு பாகிஸ்தானின் தகுதி வாய்ப்புகளை ஆபத்தில் தள்ளியுள்ளது. எனினும், அரையிறுதிக்கு முன்னேறுவதற்காக அந்த அணி சிறிது நம்பிக்கையுடன் உள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 2 சூப்பர் 12 போட்டிகள் உள்ள நிலையில் (தென்ஆப்ரிக்காவுக்கு எதிராக இன்று விளையாடி வருகிறது), அந்த இரண்டு ஆட்டங்களின் முடிவுகளும் சத்தமாக வரும் பட்சத்தில் அரையிறுதி வாய்ப்பில் இருக்கும். தவிர, பாகிஸ்தானுக்கு மேலும் இருக்கும் வாய்ப்புகள் பற்றி இங்கு பார்க்கலாம்.
வாய்ப்பு 1
பாகிஸ்தான் அதன் இரண்டு போட்டிகளிலும் (தென்ஆப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக) வெற்றி பெற வேண்டும். தென்ஆப்பிரிக்கா நெதர்லாந்திற்கு எதிராக தோல்வியடைய வேண்டும். நெதர்லாந்து – தென்னாப்பிரிக்கா இடையிலான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டாலும் பாகிஸ்தான் அரையிறுதிக்குத் தகுதி பெறும்.
வாய்ப்பு 2
பாகிஸ்தான் அதன் இரண்டு போட்டிகளிலும் (தென்னாப்பிரிக்கா மற்றும் வங்காளதேசத்திற்கு எதிராக) வெற்றி பெற வேண்டும். இந்தியா ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரு பெரிய வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். அப்படி நடந்தால், பாகிஸ்தான் நெட் ரன்ரேட் விகிதத்தில் முன்னேறும்.
நடைமுறையில், முதல் வாய்ப்புடன் ஒப்பிடுகையில் இரண்டாவது வாய்ப்பு நம்பமுடியாததாகத் தெரிகிறது. இருப்பினும் இரண்டு வாய்ப்புகளும் பாகிஸ்தான் சாதிக்க எளிதானவை அல்ல.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil