Ind vs Ban, T20 World Cup: Rahul Dravid Tamil News: 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில், குழு-2ல் இடம்பிடித்துள்ள இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானையும், 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்தையும் வீழ்த்தியது. ஆனால், நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நடந்த 3வது லீக் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டது. இதனால், புள்ளிப் பட்டியலில் இந்தியா அதே நான்கு புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா – வங்க தேச அணிகளுக்கு இடையேயான லீக் ஆட்டம் நாளை புதன் கிழமை (நவம்பர் 2 ஆம் தேதி) அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கிறது. இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

நடப்பு டி20 உலக கோப்பையில் இந்திய அணியின் தொடக்க வீரரும் அதிரடி ஆட்டக்காரருமான கே.எல்.ராகுல் 4, 9 மற்றும் 9 என ரன்கள் எடுத்து மோசமான ஃபார்மில் உள்ளார். அவர் இந்திய அணிக்கு வலுவான தொடக்கம் கொடுக்க தவறி வருவது, அவர் மீது பெரும் விமர்சனத்தை கொண்டு வந்துள்ளது. ரசிகர்களும் அவர் மீது அதிருப்தியில் உள்ளனர். அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் அல்லது வேறுஎந்த வீரரையாவது அணியில் இணைக்க வேண்டும் என்றும் கருத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்: IND vs BAN LIVE score: டி.கே, அஸ்வின் வெளியே… பண்ட், சாஹல் உள்ளே?
இந்நிலையில், இன்று பேட்டி அளித்துப் பேசிய இந்திய அணி தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், தினேஷ் கார்த்திக் நாளைய போட்டியில் பங்கேற்பாரா? மற்றும் கே.எல். ராகுல் பேட்டிங் குறித்த கேள்விகளுக்கு பதிலளித்தார்.
“கே.எல். ராகுல் தலைசிறந்த வீரர். ஆடுகளத்தில் சாதனைகள் மூலம் அதை அவர் நிரூபித்துள்ளார். அவர் சூப்பராக பேட்டிங் செய்து வருகிறார். டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு இந்தத் தொடர் எளிதானதாக அமையவில்லை. இதுபோன்ற விஷயம் டி20-யில் நிகழும். இந்த தொடர் மிகவும் சவாலானது. பயிற்சி ஆட்டத்தில் பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
அவருடைய திறமை மற்றும் தரம் எங்களுக்கு தெரியும். இந்த கண்டிசனுக்கு அவர் மிகவும் பொறுத்தமானவர். சிறந்த ஆல்-ரவுண்ட் விளையாட்டை பெற்றுள்ளார். சிறந்த பேக்-ஃபுட் வீரர். இந்த சூழலுக்கு இதுபோன்ற வீரர்தான் தேவை. அவர் பந்தை எதிர்கொள்ளும் விதத்தில் நாங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறோம்.
தினேஷ் கார்த்திக் இன்று நல்ல முறையில் பயிற்சி மேற்கொண்டார். துரதிருஷ்டவசமாக, காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சை மேற்கொண்டு நல்ல நிலையில் உள்ளார். பயிற்சி மேற்கொண்டார். நாளைய போட்டிக்கு முன் அவருடைய உடல் நிலை எப்படி இருக்கிறது என்பது மதிப்பீடு செய்ய வேண்டும். அவர் பழைய உடல் தகுதியை பெற, சிறந்த பயிற்சி அளித்துள்ளோம். நாளை காலை அவர் எவ்வாறு உள்ளார் என்பதை பார்த்து, அதன் பிறகு இறுதி முடிவு எடுப்போம்.” இவ்வாறு ராகுல் டிராவிட் கூறினார்.
இதையும் படியுங்கள்: IND vs BAN LIVE score: டி.கே, அஸ்வின் வெளியே… பண்ட், சாஹல் உள்ளே?
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil