Team Captain Rohit Sharma - Drushil Chauhan Tamil News:16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று தொடங்கியது. நவம்பர் 13ந் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக முதல் சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்த டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று விட்டது. நேரடியாக சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி, அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியானது வருகிற 23 ம் தேதி நடக்கவுள்ளது.
இந்நிலையில், இந்த தொடருக்கு தயாராகும் பொருட்டு இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது பயிற்சி ஆட்டம் பிரிஸ்பேனில் இன்று நடைபெறுகிறது.
இதற்கிடையில், 11 வயது ஸ்விங் பந்துவீச்சாளர் இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை தனது அசத்தல் பந்துவீச்சால் கவர்ந்துள்ளார். ரோகித்துக்கு நெட்டில் பந்துவீசிய துருஷில் சௌஹான் அவரிடமிருந்து வாழ்த்தையும், ஆட்டோகிராஃப்பையும் பெற்றுக்கொண்டார். இந்த வீடியோ இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) வெளியிட்டுள்ள நிலையில், அந்த வீடியோ கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
நெட் செஷனுக்குப் பிறகு, ரோஹித் துருஷிலிடம், "நீ பெர்த்தில் இருக்கிறாய்; இந்தியாவுக்காக எப்படி விளையாடப் போகிறாய்? என்று கேட்டார். அதற்கு துருஷில், "நான் நன்றாக இருக்கும் போது நான் இந்தியா செல்லப் போகிறேன்." என்று பதிலளித்துள்ளார்.
இந்திய அணியின் வீடியோ ஆய்வாளர் ஹரி பிரசாத் மோகன் பிசிசிஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஒரு வீடியோவில், கேப்டன் ரோகித் சர்மா மற்றும் 11 வயதான துருஷில் சௌஹான் சந்திப்பு குறித்து விவரித்து இருந்தார்.
"நாங்கள் பயிற்சிக்காக மேற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்திற்கு வந்தோம். அப்போது சிறுவர்கள் தங்கள் காலை விளையாட்டை முடித்துக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் டிரஸ்ஸிங் அறைக்குள் நுழைந்தவுடன், 100-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுவதையும் ரசிப்பதையும் பார்க்க முடிந்தது. இதில் அனைவரின் கண்களையும் கவர்ந்த ஒரு சிறுவர் இருந்தார்.
ரோஹித் தான் சிறுவனை முதலில் அடையாளம் கண்டுகொண்டார். அவரைப் பார்த்த பிறகு, அவர் வீசிய இரண்டு-மூன்று பந்துகள், அவரது மென்மையான ரன்-அப் மற்றும் அவர் எவ்வளவு இயல்பாக திறமையானவர் என்று அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.
ரோஹித் டிரஸ்ஸிங் அறையை விட்டு வெளியே சென்று சிறுவனை இன்னும் சில பந்துகளை வீசச் சொன்னார். ரோஹித் சர்மா அவரை பந்து வீச அழைத்தார்; அது பார்க்க ஒரு சிறந்த காட்சியாக இருந்தது. இந்திய கேப்டனுக்கு பந்து வீசிய அந்த சிறுவனுக்கு அது மறக்க முடியாத தருணமாக இருந்திருக்கும்.
இந்த சம்பவம் குறித்து துருஷில் பேசியதாவது:-
ரோஹித் சர்மா என்னை பார்த்து பந்து வீச சொன்னார். நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன், அதற்கு ஒரு நாள் முன்பு, என் அப்பா என்னிடம் ரோஹித்திடம் பந்து வீச முடியும் என்று சொன்னார். அதனால் நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன். எனக்கு மிகவும் பிடித்த பந்து ஸ்விங்கிங் யார்க்கர்." என்று கூறினார்.
ட்ருஷில் பின்னர் வீரர்கள் மற்றும் துணை ஊழியர்களுடன் தொடர்புகொள்வதற்காக டீம் இந்தியாவின்ட்ரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைய அனுமதிக்கப்பட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil