T20 World Cup 2022: Semi-final Qualification Scenarios in tamil: 8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்றது வருகிறது. தற்போது இந்தத் தொடருக்கான சூப்பர் 12 சுற்று ஆட்டங்கள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தொடரில் அரையிறுதிக்கு முன்னேற துடிக்கும் அணிகளுக்கு இடையே கடுமையான போட்டி நிலவி வருகிறது.
அரையிறுதிக்கு நடக்கும் போட்டா போட்டி
நடப்பு டி-20 உலகக் கோப்பைக்கான சூப்பர் 12 சுற்றில், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுடன் தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற அயர்லாந்து மற்றும் இலங்கை அணிகள் இடம்பிடித்துள்ளன. இதேபோல், குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் ஜிம்பாப்வே மற்றும் நெதர்லாந்து அணிகளும் இடம் பிடித்துள்ளன.
இதில், குரூப் 1ல் ஆப்கானிஸ்தான் அணியை தவிர்த்து, மற்ற எல்லா அணிகளுக்கும் இடையேயும் கடுமையான போட்டி நிலவுகிறது. குரூப் 2ல் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்று தெரிகிறது. இந்தப் பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான் அணிக்கு இன்னும் 2 ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில் அந்த இரண்டு ஆட்டங்களில் அந்த அணி ஜெயித்தாலும் மற்ற அணிகளின் முடிவுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது.

குரூப்1-ல் யாருக்கு வாய்ப்பு ?
இந்நிலையில், தற்போது குரூப்1-ல் அரயிறுதி வாய்ப்பு எந்தெந்த அணிகளுக்கு உள்ளது என்று இங்கு பார்க்கலாம்.
நியூசிலாந்து

குரூப் 1-இன் புள்ளிப் பட்டியலில் 5 புள்ளிகளுடன், +2.233 என்ற ரன்ரேட்டில் நியூசிலாந்து அணி வலுவாக முதலிடத்தில் இருக்கிறது. அந்த அணி நேற்றை ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வி கண்டது. ஆனால், நியூசிலாந்து அணி அதன் கடைசி லீக்கில் அயர்லாந்தை சாய்த்தால், சிக்கலின்றி அரையிறுதிக்குள் நுழைந்துவிடும். தோல்வி காணும் பட்சத்தில், லக்கேஜ்யை பேக் செய்ய வேண்டியது தான்.
இங்கிலாந்து

இங்கிலாந்து அணி 5 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரையிறுதிக்குள் நுழைய, இலங்கைக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் கட்டாயம் வீழ்த்தியாக வேண்டும். இங்கிலாந்தின் மற்றொரு ப்ளஸ் பாயிண்ட் அந்த அணியின் ரன்ரேட் தான். +0.547 என்ற நிலையில் ரன்ரேட் உள்ளதால் இங்கிலாந்துக்கு அரையிறுதிக்குள் அடியெடுத்து வைக்க அதிக வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலியா
டி-20 உலகக் கோப்பையைப் பொறுத்தவரை, அதை எடுத்து நடத்திய நாட்டு அணியும், முந்தைய பதிப்பில் வென்ற அணி அடுத்த பதிப்பில் வென்றதாக சரித்திரம் கிடையாது. அந்த வரலாற்றை நடப்பு டி-20 உலகக் கோப்பையை எடுத்து நடத்தி வரும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மாற்றி எழுதும் என்று பலரும் நினைத்து வரும் நிலையில், தற்போது அரையிறுதிக்குள் நுழையவே ஆஸ்திரேலியா திண்டாடும் நிலை ஏற்பட்டுள்ளது.

குரூப்1-ல் இடம்பித்துள்ள ஆஸ்திரேலியா 5 புள்ளிகளுடன், -0.304 என்ற ரன்ரேட்டில் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. அந்த அணி அரையிறுதிக்கு முன்னேற அதன் கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வெல்ல வேண்டும். அதுவும் அதிக ரன்ரேட் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது நியூசிலாந்து அல்லது இங்கிலாந்து அணிகளில் ஒன்று தங்களது கடைசி லீக் ஆட்டத்தில் தோற்ற வேண்டும். அப்படி நடக்கும் போது ஆஸ்திரேலியாவுக்கு சாதகமான நிலைமை உருவாகும்.
இலங்கை

புள்ளிபட்டியலில் 4 புள்ளிகளுடன் 4வது இடத்தில் இருக்கும் இலங்கை அணி அதன் கடைசி லீக்கில் இங்கிலாந்தை வெல்ல வேண்டும். அதோடு மற்ற அணிகளின் முடிவையும் சார்ந்து இருக்க வேண்டும். அதாவது நியூசிலாந்து அல்லது ஆஸ்திரேலிய அணிகளில் ஒன்று தங்களது கடைசி லீக்கில் தோற்க வேண்டும்.