T20 World Cup 2022 – Sunil Gavaskar and Tom Moody Tamil News: 8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நேற்று முன் தினம் முதல் (அக்டோபர் 16-ம் தேதி) ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. நவம்பர் 13-ம் தேதி வரை நடக்கவிருக்கும் இந்தத் தொடரில் மொத்தம் 16 அணிகள் களமாடியுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
தற்போது தகுதிச் சுற்று போட்டிகள் விறுவிறுப்பாக அரங்கேறி வரும் நிலையில், சமீபத்தில் நடந்த தகுதிச் சுற்றில் நமீபியா இலங்கையையும், ஸ்காட்லாந்து வெஸ்ட் இண்டீசையும் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தன. இன்று நடந்து வரும் இலங்கை – ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியும் பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சுற்று ஆட்டங்கள் வருகிற 21 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
சூப்பர் 12 சுற்று ஆட்டங்களை பொறுத்தவரை, முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வருகிற சனிக்கிழமை (அக்டோபர் 22 ஆம் தேதி) மோதுகின்றன. வருகிற அக்டோபர் 23 ஆம் தேதி, இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து எதிர்கொள்கிறது.
டி-20 உலகக் கோப்பை இறுதிப்போட்டி: பிரபலங்கள் கணிப்பு
இந்நிலையில், ஆஸ்திரேலியா – இந்தியா ஆகிய இரண்டு அணிகள் தான் இறுதிப் போட்டிக்குள் நுழையும் அணிகள் என்று முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் வீரர் டாம் மூடி மற்றும் இந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளனர்.
நேற்று திங்கள் கிழமை இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பயிற்சி ஆட்டத்திற்கு முன் ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய ந்திய ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர், “நிச்சயமாக, இந்தியா. நான் ஆஸ்திரேலியாவில் இருப்பதால் ஆஸ்திரேலியா என்று சொல்லப் போகிறேன்” என்று கூறினார்.

இதேபோல், முன்னாள் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் வீரர் டாம் மூடி, “நான் உங்களுக்கு முதல் நான்கு அணிகளைக் கொடுக்கப் போகிறேன். ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தங்கள் குழுவில் இருந்து தேர்வாகும். மற்றொரு குழுவில் இருந்து பாகிஸ்தானும் இந்தியாவும் தேர்வாகும். இறுதிப் போட்டியாளர்களாக நான் ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா என்று சொல்ல வேண்டும்.” என்று கூறினார்.

இதற்கிடையில், பிரிஸ்பேனில் நேற்று நடந்த உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்தியா 7 விக்கெட்டுக்கு 186 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ஆஸ்திரேலிய அணி 180 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி கடைசி ஓவரில் 4 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய அணி சார்பில் கே.எல்.ராகுல் 57 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 33 பந்துகளில் 50 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணியில் கேப்டன் ஆரோன் பின்ச் 54 பந்துகளில் 76 ரன்கள் எடுத்தார்.
களத்தில் அபாரமான ஃபார்மில் இருந்த விராட் கோலி, பேட் கம்மின்ஸை வெளியேற்றுவதற்கு லாங்-ஆனில் ஒரு அற்புதமான கேட்சை எடுத்தார். இதேபோல், ரன் ஓட முயன்ற டிம் டேவிட்டை ரன்-அவுட் செய்து அசத்தினார்.
நாளை புதன்கிழமை பிரிஸ்பேனில் உள்ள கப்பா மைதானத்தில், இந்தியா தனது கடைசி உலகக் கோப்பை பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil