India vs Pakistan: Melbourne weather forecast update in tamil: 16 அணிகள் பங்கேற்கும் 8-வது டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இம்மாதம் அக்டோபர் 16-ம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் தொடங்கியது. தற்போது விறுவிறுப்பாக அரங்கேறி வரும் இந்தத் தொடரில் தகுதிச் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த தகுதிச் சுற்றில் மொத்தம் 8 அணிகள் களம் கண்டுள்ளன. இவை குரூப் – ஏ, குரூப் – பி என இரு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன.
குரூப் – ஏ- வில் இலங்கை, நமீபியா, நெதர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளும், குரூப் – பி-யில் வெஸ்ட் இண்டீஸ் ஜிம்பாப்வே, ஸ்காட்லாந்து மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பிடித்துள்ளன. ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அதாவது சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும்.
சூப்பர் 12 சுற்றில், அணிகள் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, குரூப் 1ல் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து போன்ற அணிகளுடன் தகுதிச் சுற்றில் தகுதி பெற்ற ஏ1 மற்றும் பி2 அணிகளும் இடம்பிடிக்கும். இதேபோல் குரூப் 2-ல் இந்தியா, பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற அணிகளுடன் ஏ2 மற்றும் பி1 அணிகளும் இடம்பிடிக்கும்.
சூப்பர் 12 சுற்றின் போது, ஒவ்வொரு அணியும் மற்ற அணியுடன் ஒரு போட்டியில் விளையாடும். எனவே, ஒவ்வொரு அணியும் மொத்தம் 5 போட்டிகளில் விளையாடும். இந்த சுற்றின் முடிவில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறுபவர்கள் இறுதிப் போட்டியில் மோதுவார்கள்.
சூப்பர் 12 சுற்று - இந்தியா vs பாகிஸ்தான்
இந்த தொடருக்கான பிரதான சுற்றான சூப்பர் 12 சுற்று வருகிற வருகிற சனிக்கிழமை (அக்டோபர் 22 ஆம் தேதி) முதல் தொடங்குகிறது. சிட்னியில் நடக்கும் முதல் லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. மறுநாள் ஞாயிற்றுகிழமை (அக்டோபர் 23 ஆம் தேதி) இந்திய அணி அதன் முதல் லீக் ஆட்டத்தில் கிரிக்கெட்டில் பரம எதிரியாக பாகிஸ்தானை மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் வைத்து சந்திக்கிறது.
மெல்போர்னில் 80% மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் மெல்போர்ன் மைதானத்தில் 80 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த போட்டிக்காக ஏற்கனவே அனைத்து டிக்கெட்டுகளும் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த செய்தி ரசிர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
“அதிக (80%) மழைக்கான வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் மாலையில் இருக்கும். மாலை நேரத்தில் தென்கிழக்கு திசையில் மணிக்கு 15 முதல் 25 கிமீ வேகத்தில் காற்று வீசும்." என்று ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
இதேபோல், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து மோதும் சிட்னியில் மைதானத்தில் 90 சதவீதம் மழைக்கு வாய்ப்புள்ளதாக ஆஸ்திரேலியாவின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
"சிட்னியில் சனிக்கிழமை மிகவும் அதிகமாக (90%) மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. பெரும்பாலும் மதியம் மற்றும் மாலை நேரங்களில் மழை இருக்கும். இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று வடகிழக்கு திசையிலிருந்து மணிக்கு 15 முதல் 20 கிமீ வேகத்தில் வீசி, மணிக்கு 25 கிமீ வேகத்தில் அதிகரித்து, பகலில் மணிக்கு 15 முதல் 20 கிமீ வேகத்தில் வடக்கே திரும்பும்." என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
மழையால் இந்தியாவின் பயிற்சி ஆட்டம் ரத்து
இதற்கிடையில், நேற்று புதன்கிழமை பிரிஸ்பேனில் நியூசிலாந்துக்கு எதிரான இந்தியாவின் பயிற்சி ஆட்டம் இடைவிடாத மழையால் கைவிடப்பட்டது. இதேபோல், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடிய பயிற்சி ஆட்டமும் ரத்து செய்யப்பட்டது.
தற்போது சூப்பர் 12 சுற்றுக்கு முன்னேறும் அணிகளுக்கான முக்கியமான ஆட்டங்களில் அயர்லாந்து வெஸ்ட் இண்டீஸையும், ஸ்காட்லாந்து ஜிம்பாப்வேயையும் வருகிற வெள்ளிக்கிழமை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிகள் நடக்கும் ஹோபார்ட் மைதானத்தில் 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும் ஆஸ்திரேலியா வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நடப்பு டி-20 உலகக் கோப்பை தொடரில் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைப் போலல்லாமல், குழு நிலை போட்டிகளுக்கு ரிசர்வ் நாட்கள் இல்லை. எனவே சில போட்டிகள் மழைக் காரணமாக ரத்து செய்யப்பட்டால், நாக் அவுட் ஆட்டங்களில் அணிகள் எவ்வாறு வெளியேறும் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.