வேட்டையாடவே வெறியோட சுத்துறான்… ஒர்க்அவுட்டில் மிரட்டும் கோலி; வீடியோ எடுத்த சூர்ய குமார் யாதவ்!
டி-20 உலக கோப்பை தொடருக்காக தயாராகி வரும் விராட் கோலி வெறித்தனமாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அவரது சக வீரரான சூர்ய குமார் யாதவ் பதிவு செய்துள்ளார்.
Virat Kohli Tamil News: 16 அணிகள் பங்கேற்கும் 8வது டி20 உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நேற்று முன் தினம் (அக்டோபர் 16 ஆம் தேதி) முதல் தொடங்கியது. நவம்பர் 13 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்தத் தொடரில், 16 அணிகளில் 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாட உள்ளன. மீதமுள்ள 4 அணிகளை தேர்வு செய்யும் விதமாக தகுதி சுற்று ஆட்டங்களில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
Advertisment
இந்த டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்காக ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 10 நாட்களுக்கு முன்பே ஆஸ்திரேலியா சென்று விட்டது. நேரடியாக சூப்பர் 12 சுற்றில் அடியெடுத்து வைக்கும் இந்திய அணி, அதன் முதலாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இந்தப் போட்டியானது வருகிற 23 ம் தேதி நடக்கவுள்ளது.
நடப்பு டி-20 உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில், நட்சத்திர வீரராக வலம் வரும் முன்னாள் கேப்டன் விராட் கோலி சேர்க்கப்பட்டுள்ளார். நடப்பு ஆசிய கோப்பை தொடரில் மீண்டும் ஃபார்முக்கு திரும்பிய அவர், தற்போது இந்த தொடருக்காக தீவிரமாக தயாராகி வருகிறார்.
இந்த உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணிக்கு இரண்டு (ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக) அதிகாரபூர்வ பயிற்சி ஆட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய அணி நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டத்தில் 187 ரன்கள் கொண்ட இலக்கை துரத்திய ஆஸ்திரேலியா 6 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.
இந்த ஆட்டத்தில் சிறப்பாக பீல்டிங் செய்த விராட் கோலி ஸ்டம்ப்பிங் மற்றும் பிரமிக்க வைக்கும் கேட்ச் பிடித்து மிரட்டி இருந்தார். ஆட்டத்தின் 18.2 வது ஓவரில் ரன் ஓட முயன்ற டிம் டேவிட்டை ரன்-அவுட் செய்தார். மேலும், ஷமி வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் சிக்ஸர் அடிக்க முயன்று பாட் கம்மின்ஸ் பவுண்டரி கோட்டிற்கு அருகில் பறக்க விட்ட பந்தை அசத்தலாக கேட்ச் பிடித்து மிரட்டினார் கோலி. அவரின் இந்த அசத்தல் கேட்சிற்கு ரசிர்கள் பாராட்டு மழை பொழிந்து வருகிறார்கள்.
ஒர்க்அவுட்டில் மிரட்டும் கோலி
இந்நிலையில், டி-20 உலக கோப்பை தொடருக்காக தயாராகி வரும் விராட் கோலி வெறித்தனமாக ஜிம்மில் ஒர்க்அவுட் செய்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை அவரது சக வீரரான சூர்ய குமார் யாதவ் பதிவு செய்துள்ளார்.
பொதுவாக, இந்திய வீரர் விராட் கோலி ஃபிட்னசில் கராராக இருப்பார். மேலும், மிகப்பெரிய ஒர்க்அவுட் இலக்குகளை எப்படி அமைப்பது என்பது பற்றியும் அவருக்கு தெரியும். ஒவ்வொரு முறையும் அவர் தனது ஒர்க்அவுட் வீடியோவை வெளியிடும் போதும் நம்பில் பலர் குறிப்புகளை எடுப்பது வழக்கம். அந்த வகையில், விராட் கோலி சமீபத்திய ஒர்க்அவுட் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அந்தப் பதிவில் கோலி, "Mobility is key" என்று கேப்ஷன் இட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவை அவரது சக வீரரான சூர்ய குமார் யாதவ் தான் பதிவு செய்தார் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில், கோலி ஜிம்மில் பளு தூக்கும் வீடியோ அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகம் பகிரப்பட்டு சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது.