News about Matthew Hayden, Pakistan in tamil: ஆஸ்திரேலிய மண்ணில் 8-வது டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதன் சூப்பர் 12 லீக் சுற்றில் நேற்று காலை நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நெதர்லாந்து வெற்றி பெற்றது. இந்த அதிர்ச்சி தோல்வியால் தென் ஆப்பிரிக்கா அணியின் அரையிறுதி வாய்ப்பு தகர்ந்தது. இதனால், பாகிஸ்தான் – வங்க தேசம் அணிகளுக்கு அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உருவானது.
இந்நிலையில், பாகிஸ்தான் – வங்க தேசம் அணிகளுக்கு இடையேயான சூப்பர் 12 சுற்றின் 41வது போட்டி நேற்று அடிலெய்டு மைதானத்தில் நடந்தது. இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி அரையிறுதி தகுதி பெற்றது. இதனால், ஏற்கனவே அரையிறுதிக்கு தகுதி பெற்ற நியூசிலாந்து, இங்கிலாந்து, இந்தியா, ஆகிய அணிகளுடன் பாகிஸ்தான் நான்காவது அணியாக இணைந்துள்ளது.
அரையிறுதி போட்டிகளைப் பொறுத்தவரை, வருகிற புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. மறுநாள் வியாழக்கிழமை நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
எச்சரிக்கை விடுத்த பாகிஸ்தான்
பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ள நிலையில், அந்த அணியின் வழிகாட்டியான மேத்யூ ஹெய்டன் தொடரில் உள்ள முக்கிய போட்டியாளர்களான இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு ஒரு பெரிய எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் சமூக ஊடகங்களில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோ பாகிஸ்தான் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமில் எடுக்கப்பட்டுள்ளது. அதில் பாகிஸ்தான் அணியின் வழிகாட்டியான மேத்யூ ஹெய்டன் அணிக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளைப் பேசுகிறார். மேலும் அவர் இந்தியா, நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு ஆகிய 3 அணிகளுக்கும் எச்சரிக்கையை விடுக்கிறார்.
"அது வேறுவிதமான முடிவாக இருக்கும் என்று அந்த வகையான சிந்தனை இருந்தது. ஆனால் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி உள்நோக்கத்துடன் அடித்து விளையாட ஆரம்பித்தது, அதன் பற்களை வெளிப்படுத்தத் தொடங்கிய தருணம், அணி உண்மையான அச்சுறுத்தலாக மாறியுள்ளது. தற்போது, இந்தப் போட்டியில், நம்மை எதிர்கொள்ள இந்த உலகில் யாரும் இருக்க மாட்டார்கள், ஒருவர் கூட இல்லை. நம்மை ஒழித்துவிட்டார்கள் என்று நினைத்தார்கள். இப்போது, அவர்கள் நம்மை அகற்றப் போவதில்லை.
நெதர்லாந்து (டச்சு) இல்லையென்றால், ஒருவேளை, நாம் இங்கே இல்லை. இப்போது நாம் இங்கே இருக்கிறோம், அது சக்தி வாய்ந்தது. ஏனென்றால் யாரும் நம்மை இங்கு பார்க்க விரும்புவதில்லை. அதுதான் நமக்கு பலன் கிடைத்துள்ள ஆச்சரியத்தின் கூறு,” என்று மேத்யூ ஹெய்டன் கூறியுள்ளார்.
🗣️ Encouraging words from 🇵🇰 team mentor Matthew Hayden following the win over Bangladesh that sealed our spot in the semi-finals 🔊#WeHaveWeWill | #T20WorldCup pic.twitter.com/OgolOwGfGs
— Pakistan Cricket (@TheRealPCB) November 6, 2022
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.