T20 World Cup – semi-finals washed out scenarios Tamil News: ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்று வரும் 8வது டி20 உலகக் கோப்பை (டி20 உலகக் கோப்பை 2022) தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடருக்கான அரையிறுதி போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில், நாளை புதன்கிழமை நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் நியூசிலாந்து – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து, நாளை மறுநாள் வியாழக்கிழமை நடக்கும் 2வது அரையிறுதி போட்டியில் இந்தியா – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
நடப்பு சாம்பியன் வெளியேற்றம்

நடப்பு டி20 உலகக் கோப்பையை எடுத்து நடத்தி வரும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறியது. குரூப் 1ல் இடைபிடித்திருந்த அந்த அணி 5 போட்டிகளில் வெற்றி பெற்று 7 புள்ளிகள் மற்றும் -0.173 என்ற நெட் ரன்ரேட்டுடன் இருந்த நிலையில், அதைவிட புள்ளிகள் வித்தியாசத்திலும், நெட் ரன்ரேட் வித்தியாசத்திலும் அதிகம் இருந்த நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் அறையிறுதிக்கு முன்னேறின. இதனால் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா அரையிறுதிக்கு தகுதி பெறாமல் சூப்பர் 12 சுற்றுடன் வெளியேறும் நிலை ஏற்பட்டது.
நாக் அவுட் சுற்றுக்கு ஐசிசி விதிகள்

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் நாக் அவுட் சுற்று போட்டிகள் நாளை முதல் தொடங்கவுள்ள நிலையில், அதற்கான விதிகளை ஐசிசி ஏற்கனவே வெளியிட்டது. அவ்வகையில், இந்த நாக் அவுட் போட்டிகள் மழையால் நடைபெறாமல் போனால், எந்த அணிக்கு சாதகம் என்பதை இங்கு பார்க்கலாம்.
Four teams remain 🤩
— T20 World Cup (@T20WorldCup) November 8, 2022
It all begins at the SCG 🏟#T20WorldCup pic.twitter.com/MkSsYYE0pd
இரண்டு டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிகளும் மழையால் கைவிடப்பட்டால் என்ன ஆகும்?
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி)அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டி என இரண்டிற்கும் ரிசர்வ் நாள் வைத்துள்ளது. நவம்பர் 9 ஆம் தேதி முதல் அரையிறுதிப் போட்டி நடைபெற உள்ளது. இந்த ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டால், இரண்டாம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து தொடங்கும்.

அதாவது, முதல் நாளில் ஒரு அணி 5 ஓவர்களில் 2 விக்கெட்டுக்கு 50 ரன்கள் எடுத்திருந்தால், இரண்டாவது நாள் ஆட்டம் அங்கிருந்து தான் தொடங்கும். மழை காரணமாக இரண்டாவது நாளில் கூட ஆட்டத்தை முடிக்க முடியாவிட்டால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் வகிக்கும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியதாக அறிவிக்கப்படும். அப்படியொரு நிலை வந்தால், இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு தான் அதிக நன்மை கிடைக்கும். ஏனென்றால், நியூசிலாந்து அணி 7 புள்ளிகளுடன் குரூப்-1ல் முதலிடத்திலும், இந்திய அணி 8 புள்ளிகளுடன் குரூப்-2ல் முதலிடத்திலும் உள்ளன.
ஐசிசி விதியின்படி, லீக் சுற்றில் போட்டியின் முடிவுக்காக இரு அணிகளும் குறைந்தது 5-5 ஓவர்கள் பேட் செய்வது அவசியம் என்று இருந்தது. ஆனால், அரையிறுதி போன்ற நாக் அவுட் சுற்றில் அது மாறிவிட்டது. இப்போது இரு அணிகளும் குறைந்தது 10-10 ஓவர்கள் விளையாட வேண்டும். போட்டியின் இறுதிப் போட்டி நவம்பர் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. மழை காரணமாக இறுதிப் போட்டி நடைபெறவில்லை என்றால் போட்டி டிரா என அறிவிக்கப்படும். ஐசிசியின் விதிமுறைப்படி இரு அணிளும் வெற்றியாளராக அறிவிக்கப்படுவார்கள். டி20 உலகக் கோப்பை வரலாற்றில் கூட்டாக வென்றதில்லை.
பரிசுத் தொகை
நடப்பு டி-20 உலகக் கோப்பையின் மொத்தப் பரிசுத் தொகையாக 45 கோடிகள் வழங்கப்படப்பட உள்ளது. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 13 கோடியும், ரன்னர்-அப் அணிக்கு 6.5 கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்படும். அரையிறுதியில் தோல்வியடையும் அணிகளுக்கு ரூ.3.26 கோடியும், சூப்பர்-12 சுற்றில் வெளியேறும் அணிகளுக்கு ரூ.57 லட்சமும் வழங்கப்படும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil