T.N Young Table Tennis player Died: மேகாலாவில் கார் விபத்தில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் உயிரிழந்தார். அவருக்கு வயது 18.
83ஆவது சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்வதற்காக மேகாலய மாநிலம், ஷில்லாங் சென்றுகொண்டிருந்தபோது நிகழ்ந்த சாலை விபத்தில் அவர் உயிரிழந்தார்.
அஸ்ஸாம் மாநிலம், கவுஹாத்தியில் இருந்து ஷில்லாங்கிற்கு 3 சக வீரர்களுடன் விஸ்வா காரில் ஞாயிற்றுக்கிழமை சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த லாரி அவர்கள் வந்த கார் மீது மோதியது. இதில் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் விஸ்வா உயிரிழந்தார்.
ஏப்ரல் 27ம் தேதி ஆஸ்திரியாவின் லின்ஸில் தொடங்க உள்ள சர்வதேச போட்டியில் இந்தியா சார்பில் விஸ்வா தீனதயாளன் பங்கேற்க இருந்த நிலையில் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேகாலய முதல்வர் இரங்கல்
விஸ்வா மறைவுக்கு மேகாலய முதல்வர் கான்ராட் சங்மா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இளம் வயதில் கனவுகளை சுமந்துகொண்டிருந்த தீனதயாளன் சாலை விபத்தில் உயிரிழந்தது மிகுந்த மனவேதனையை தருகிறது. அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தேவையான அனைத்து நடைமுறைகளையும் முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். அவரது ஆத்மா சாந்தி அடையட்டும் என்று டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு வெளியிட்ட அறிக்கையில், கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விஸ்வா தீனதயாளன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
அவருடன் இருந்த சக வீரர்களான ரமேஷ் சந்தோஷ் குமார், அபினாஷ் பிரசன்னாஜி ஸ்ரீநிவாசன், கிஷோர் குமார் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழக முதல்வர் இரங்கல்
இதனிடையே, விஸ்வா தீனதயாளன் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
IPL 2022 CSK vs GT: மில்லர் அதிரடியில் குஜராத் வெற்றி; சென்னை மீண்டும் தோல்வி
இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் வெளியிட்ட இரங்கல் செய்தியில், இளம் டேபிள் டென்னிஸ் வீரர் உயிரிழந்த தகவலை அறிந்து மிகுந்த மன வேதனை அடைந்தேன்.
அவரது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது மறைவுக்கு டேபிள் டென்னிஸ் வீரர்கள் உள்பட பலரும் இரங்கள் தெரிவித்தனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil