ஆப்கானிஸ்தானில் இந்திய பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகளை ஒளிபரப்ப அந்நாட்டில் புதியதாக ஆட்சிக்கு வந்துள்ள தலிபான் அரசு தடை செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் 2021 போட்டிகளில் ரஷித் கான், முகமது நபி மற்றும் முஜீப் உர் ரஹ்மான் போன்ற முன்னணி ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.
ஐபிஎல் 2021 சீசன் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மீண்டும் தொடங்கியது. இஸ்லாமிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் இடையே போட்டி நடைபெற்றது.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் ஊடக மேலாளர் எம். இப்ராகிம் மொமண்ட், தலிபான்களின் இஸ்லாமிய எமிரேட்ஸில் தடைசெய்யப்பட்ட புர்கா இல்லாமல், பெண்கள் நடனமாடுவது மற்றும் இஸ்லாமிய எதிர்ப்பு உள்ளடக்கம் காரணமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்புவது அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஐபிஎல் ஒளிபரப்புக்கு தலிபான் அரசு தடை விதித்ததாக அந்நாட்டைச் சேர்ந்த மற்ற பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.
கடந்த வாரம், ஆப்கானிஸ்தானின் புதிய விளையாட்டுத் தலைவர் தலிபான்கள் 400 விளையாட்டுகளை அனுமதிப்பார்கள் என்று கூறினார். ஆனால், பெண்கள் விளையாடும் ஏதாவது ஒரு விளையாட்டை விளையாட அனுமதிக்க முடியுமா என்பதை உறுதிப்படுத்த மறுத்துவிட்டனர். “தயவுசெய்து பெண்களைப் பற்றி மேலும் கேள்விகள் கேட்காதீர்கள்” என்று பஷீர் அஹ்மத் ருஸ்தம்சாய் ஏ.எஃப்.பி செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.
1996 முதல் 2001 வரையிலான தீவிரவாதிகளின் மிருகத்தனமான மற்றும் அடக்குமுறை ஆட்சியின்போது, ஆண்கள் விளையாட்டுகள் கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டன. அப்போது, பெண்கள் எந்த விளையாட்டையும் விளையாட முற்றிலும் தடை செய்யப்பட்டது. பெண்களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெரிதும் தடை செய்யப்பட்டது.
கடந்த மாதம் பல ஆப்கானிஸ்தான் பெண்கள் மற்றும் பெண்கள் உரிமை செயல்பாட்டாளர்கள் இந்த குழு அமெரிக்க ஆதரவு அரசாங்கத்தை வீழ்த்திய பின்னர் இதுபோன்ற கொள்கைகள் மீண்டும் நடைமுறைக்கு வரும் என்று அச்சம் தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“