ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பெங்களூர் அணியின் கேப்டன் விராட்கோலி தனது ஆக்ரோஷமான அணுகுமுறையின் காரணமாக நடுவர்களால் கண்டிக்கப்பட்டுள்ளார்.
இந்தியன் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் கடந்த ஏப்ரல் 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடர், கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக இந்தியாவின் முக்கிய 6 நகரங்களில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது. இதில் நேற்று சென்னையில் நடைபெற்ற 6-வது லீக் ஆட்டத்தில் விராட்கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசஸ் ஐதராபாத் அணியுடன் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த பெங்களூர் அணி நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து 150 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணி 143 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூர் அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக இந்த போட்டியில் பெங்களூர் அணியின் பேட்டிங்கின் போது தொடக்க வீரராக களமிறங்கிய கேப்டன் விராட்கோலி 29 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் குவித்த நிலையில், ஐதராபாத் அணி வீரர் ஜான்சன் ஹோல்டரின் பவுன்சர் பந்துவீச்சில் விஜய் சங்கரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
களத்தில் எப்போதும் ஆக்ரோஷமாக இருக்கும் விராட்கோலி, பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலுமே தனது ஆக்ரோஷத்தை கடுமையாக வெளிப்படுத்தி வருகிறார். மேலும் முன்னாள் கேப்டன் கங்குலியை விட ஒரு படி மேலே தனது ஆக்ரேஷத்தை வெளிப்படுத்தி வரும் இவர், நேற்றையபோட்டியில் தனது ஆக்ரோஷமான அணுகுமுறையினால், நடுவரின் கண்டிப்புக்கு ஆளாகியுள்ளார். நேற்றைய போட்டியில், அதிக ரன் குவிக்க முயற்சித்த கோலி, திடீரென தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் விரக்தியடைந்த அவர், களத்திற்கு வெளியே சென்றவுடன் விளம்பர பேனர்களும், வீரர்கள் அமரும் சேர்களை எட்டி உதைத்துள்ளார்.
விராட்கோலியின் இந்த அணுகுமுறை அங்கிருந்த கேமராவில் பதிவாகியிருந்த நிலையில், போட்டி நடுவரான வெங்கல் நாராயண் குட்டி மற்றும் கள நடுவரான, நிதின் மேனன் மற்றும் உல்ஹாஸ் காந்தே ஆகியோர்“ஐபிஎல் நடத்தை விதிகளின் நிலை 1 (Level 1) ன் படி விராட் கோலி ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதற்காக அவரை கண்டித்துள்ளனர். ஆனால் அவருக்கு எந்த அபராதமும் விதிக்கப்படவில்லை. இந்த போட்டியில், மூன்றாவது விக்கெட்டுக்கு கிளைன் மேகஸ்வெல்லுடன் இணைந்து 44 ரன்கள் சேர்த்த விராட்கோலி, 13வது ஓவரின் முதல் பந்தில் ஆட்டமிழந்தார்.
மேலும், 2016-ம் ஆண்டுக்கு பிறகு மேக்ஸ்வெல் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை அடித்து 59 ரன்கள் சேர்த்தார். இதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil