1971-ம் ஆண்டு முதல் ஆக்கி போட்டியில் உலககோப்பை தொடர் நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட உலககோப்பை ஆக்கி தொடர் 1978-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுவதாக மாற்றியமைக்கப்பட்டது.
அந்த வகையில் 2018-ம் ஆண்டு இந்தியாவில் உலககோப்பை ஆக்கி தொடர் நடத்தப்பட்டதை தொடர்ந்து 2023-ம் ஆண்டு தொடர்ந்து 2-வது முறையாக இந்தியா உலககோப்பை ஆக்கி தொடரை நடத்துகிறது. இந்த தொடர் ஜனவரி 13-ந் தேதி (இன்று) தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
16 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் அனைத்து அணிகளும், 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் இந்திய அணி டி பிரிவில் இங்கிலாந்து ஸ்பெயின், வேல்ஸ் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணியுடன் ஒருமுறை மோதும். இதில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும்.
2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் 2-வது சுற்றில் மோதி அதில் இருந்து 4 அணிகள் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெறும். உலககோப்பை வரலாற்றில் இந்திய அணி முதல் உலககோப்பை நடந்த 1971-ம் ஆண்டு 3-வது இடத்தை பிடித்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டம் வென்றது. தொடர்ந்து 1973-ம் ஆண்டு நடந்த தொடரில் இந்திய அணி 2-வது இடத்தை பிடித்தது.
1975-ம் ஆண்டு நடந்த உலககோப்பை தொடரில், அஜித்பால் சிங் தலைமையில் களமிறங்கிய இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. ஆனால் அதன்பிறகு இந்திய அணிக்கு சாம்பியன் பட்டம் என்பது கனவாகவே போய்விட்டது. 2018-ம் ஆண்டு இந்தியாவில் நடந்த உலககோப்பை தொடரில் கூட இந்திய அணி காலிறுதியோடு வெளியேறியது.
கோப்பையை வென்று 48 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், இந்த உலககோப்பை தொடரை இந்தியா வெல்ல வேண்டும் என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கல பதக்கம் வென்ற இந்திய அணி மிகுந்த நம்பிக்கையுடன் உலககோப்பை தொடரில் களமிறங்கியுள்ளது. தற்போது உலகத் தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ள இந்திய அணி, ஹர்மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர்.
இந்நிலையில், 15-வது உலககோப்பை தொடரின் தொடக்க நாளான இன்று, 4 ஆட்டங்கள் நடைபெற்றது. இதில் இரவு 7 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் இந்திய அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. உலக தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயின் அணி இந்திய அணிக்கு சவால் அளிக்கும் வகையில் இளம் வீரர்களுடன் களமிறங்க உள்ளது.
ப்ரோ லீக் ஆக்கி தொடரில் இந்தியா சிறப்பாகச் செயல்பட்டு, 2021-22 சீசனில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. இதுவும் இந்திய அணிக்கு தன்னம்பிக்கை மற்றும் வெற்றி மனப்பான்மை அதிகரிக்கும் செயலாக மாறியுள்ளது.
Are you ready to celebrate India’s first victory in the FIH Odisha Hockey Men’s World Cup 2023 Bhubaneswar-Rourkela.
— Hockey India (@TheHockeyIndia) January 13, 2023
🤩🤩💥💥💥
IND 2:0 ESP 🇪🇸#HockeyIndia #IndiaKaGame #HWC2023 #StarsBecomeLegends @CMO_Odisha @sports_odisha @IndiaSports @Media_SAI
இதனிடையே முதல் நாளான இன்று இந்திய அணி தனது பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்பெயின் அணியுடன் மோதியது. தவரிசையில் 6-வது இடத்தில் உள்ள இந்தியாவும் 8-வது இடத்தில் உள்ள ஸ்பெயினும் மோதிய இந்த போட்டி ஒடிசா மாநிலத்தில் நடைபெற்றது.
பரபரப்பாக தொடங்கிய இந்த போட்டியில், 12-வது நிமிடத்தில் ரோகிதாஸ் அமித் இந்திய அணிக்காக முதல் கோலை அடித்து முன்னிலை பெற வைத்தார். இதற்கு பதில் கோல் திருப்ப ஸ்பெயின் அணி முழுவீச்சில் ஆட்டத்தை தொடர்ந்து வந்த நிலையில், அவர்களின் முயற்சிக்கு இந்திய வீரர்கள் சிறப்பாக தடை போட்டனர்.
அதன்பிறகு 26-வது நிமிடத்தில் இந்தியாவின் ஹார்டிங் சிங் இந்திய அணிக்காக 2-வது கோலை அடித்தார். இதன் பிறகு இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்த நிலையில், இந்திய அணி இரண்டு கோல் வாய்ப்புகளை தவறவிட்டது. இதனால் இறுதியில் 2-0 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.
தொடர்ந்து 2-வது முறையாக இந்தியாவில் நடைபெறும் உலககோப்பை ஆக்கி தொடரில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்கியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“