16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி 5 அடுக்கு கேக் வெட்டும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அசைக்க முடியாத அணியாக வலம் வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்து மகேந்திரசிங் தோனி கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 14 ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள சென்னை அணி 12 முறை ப்ளேஅப், 10 முறை இறுதிப்போட்டி 5 முறை சாம்பியன் என வலுவான அணியாக உள்ளது.
இதில் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரின் 16-வது சீசனில் தோனி தலைமையில் களமிறங்கிய சென்னை அணி லீக் சுற்றின் முடிவில் புள்ளிப்பட்டியலில் 2-வது இடம் பிடித்து முதல் குவாலிபையர் போட்டியில் குஜராத் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. தொடர்ந்து கடந்த மே 29-ந் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்ற இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது.
இதில் மழை காரணமாக 15 ஓவர்களில் 171 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவையாக இருந்தது. அப்போது களத்தில் இருந்த ஜடேஜா ஒரு சிக்சர் மற்றும் ஒரு பவுண்டரி அடித்து சென்னை அணிக்கு வெற்றியை தேடி கொடுத்தார். இதன் மூலம் 5-வது முறையாக ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்ற சென்னை அணி மும்பை அணியின் சாதனையை சமன் செய்துள்ளது.
சென்னை அணியின் இந்த வெற்றியை தமிழக ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடி வரும் நிலையில், கேப்டன் மகேந்திர சிங் தோனி உண்மையில் இந்த ஐபிஎல் சீசனில் ரசிகர்களின் விருப்பமாக வீரராக திகழ்ந்தார். மேலும் அவர் களத்தில் இறங்கிய விளையாடுவதை பார்க்க மற்ற அணியின் ரசிகர்கள் கூட ஆர்வமாக காத்திருந்தனர். தற்போது சென்னை அணி சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது அணியின் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சென்னை வந்த வீரர்களை பார்க்க ரசிகர்கள் ஆவமுடன் திரண்டிருந்தனர்.
இதனிடையே சென்னை அணி 5-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளதை கொண்டாடும் விதமாக 5 அடுக்கு கேக் வெட்டும் வீடியோ காட்சி சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. "தி கிங்ஸ் விக்டரி மார்ச்" என்று பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ தற்போதுவரை 453k பார்வைகளையும் 30k லைக்ஸ்சையும் பெற்றுள்ளது. இந்த வீடியோவின் தொடக்கத்தில் பஸ்ஸில் வரும் சென்னை அணி வீரர்களை பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருக்கின்றனர்.
ரசிகர்கனை நோக்கி கையசைத்தபடி வீரர்கள் பேருந்தில் இருந்து இறங்கி உற்சாகமாக நடனமாடிக்கொண்டே உள்ளே செல்கின்றனர். சென்னை அணியின் டெத் பௌலர் மகிஷா பதிரானா ஐபிஎல் கோப்பையை எடுத்துச்செல்கிறார். சென்னை அணி கோப்பையை வென்ற மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில், ஒரு விருந்து மண்டபத்தில், சமையல்காரர்கள் ஒரு பெரிய ஐந்து அடுக்கு கேக்கைத் தயாரித்துள்ளனர். இந்த கேக்கில், சென்னை அணி பட்டம் வென்ற 2010, 2011, 2018, 2021 மற்றும் 2023 என்று எழுதப்பட்டு மஞ்சள் மற்றும் நீல நிறத்தில் தீம் செய்யப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து கேப்டன் மகேந்திர சிங் தோனி கேக் வெட்டுவதைக் காண, சமையல் கலைஞர்கள் மற்றும் சக ஊழியர்கள் அவரை உற்சாகப்படுத்துகின்றனர். இந்த வீடியோ பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil