ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி நிதீஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா உடல்நிலை சரியில்லாத காரணத்தில் களமிறங்காத நிலையில், சூர்யகுமார் யாதவ் கேப்டன் பொறுப்பேற்றார். சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இன்றைய போட்டியின் மூலம் ஐபிஎல் போட்டியில் அறிமுகமானார்.
முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில், குர்பாஸ் ஜகதீசன் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில் 4 பந்துகளை சந்தித்த ஜகதீசன் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார். அதன்பிறகு களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர் அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்த்தார். ஆனால் மறுமுனையில், குர்பாஸ் 8 ரன்களிலும் கேப்டன் ராணா 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.
வழக்கத்திற்கு மாறாக 5-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஷெர்தல் தாகூர் 13 ரன்களிலும், ரின்கு சிங் 18 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் சரிந்தாலும் ஒருபுறம் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்திய வெங்கடேஷ் அய்யர் 49 பந்துகளில் சதமடித்து அசத்தினார். ஆனால் 51 பந்துகளில் 6 பவுண்டரி 9 சிக்சருடன் 104 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
ஐபிஎல் தொடங்கப்பட்ட 2008-ம் ஆண்டு முதல் போட்டியில் கொல்கத்தா அணிக்காக பிராண்டன் மெக்கல்லம் சதமடித்திருந்தார். அதன்பிறகு 15 வருடங்கள் கழித்து கொல்கத்தா அணிக்காக வெங்கடேஷ் அய்யர் 2-வது சதம் அடித்துள்ளார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் பதிவான 2-வது சதம் இதுவாகும்.
நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 6 விக்கெட் இழப்பிற்கு 185 ரன்கள் குவித்துள்ளது. ஆந்த்ரே ரஸல் 11 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்சருடன் 21 ரன்களும், நரேன் 2 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். மும்பை அணி தரப்பில், ஹர்திக் ஷோகீன் 2 விக்கெட்டும், கிரீன், ஜென்சன், சாவ்லா, மெர்டித் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
மும்பை பேட்டிங்
மும்பை அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். இருவரும் தொடக்க முதலே அதிரடியாக ஆடினார். இருவரும் சிக்சரும் பவுண்டரிகளுமாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்தது. மும்பை 65 ரன்கள் எடுத்திருந்தப்போது, ரோகித் 20 ரன்களில் அவுட் ஆனார். இதில் 2 சிக்சர்கள் மற்றும் 1 பவுண்டரி அடங்கும். அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவும் அதிரடியாக ஆடினார். இதற்கிடையில் சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த இஷான் கிஷன் 58 ரன்களில் அவுட் ஆனார். 25 பந்துகளைச் சந்தித்த இஷான் கிஷன் 5 சிக்சர் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார்.
அடுத்ததாக திலக் வர்மா களமிறங்கி சிறப்பாக விளையாடினார். மறுபுறும் சூர்யகுமார் கொல்கத்தா பந்துவீச்சை சிதறடித்தார். விக்கெட் வீழ்த்த முடியாமல் கொல்கத்தா பவுலர்கள் திணறினர். மும்பை 147 ரன்கள் எடுத்திருந்தப்போது திலக் 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக டிம் டேவிட் களமிறங்கினார். இந்த நிலையில் சிறப்பாக ஆடி வந்த சூர்யகுமார் 43 ரன்களில் அவுட் ஆனார். 25 பந்துகளைச் சந்தித்த சூர்யகுமார் 3 சிக்சர்கள் மற்றும் 4 பவுண்டரிகள் அடித்தார். அடுத்து களமிறங்கிய 6 ரன்களில் அவுட் ஆனார். அடுத்ததாக கிரீன் களமிறங்கி 1 ரன் எடுத்த நிலையில், மும்பை வெற்றி இலக்கை எட்டியது. டிம் டேவிட் 24 ரன்களுடன் களத்தில் இருந்தார். இதனால், மும்பை அணி 17.4 ஓவர்களில் 186 ரன்கள் எடுத்து, 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா அணியில் சுயாஷ் ஷர்மா 2 விக்கெட்கள் வீழ்த்தினார். இந்த வெற்றி மூலம் மும்பை அணி 2 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil