Tamilnadu Cricket Association: 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிப் போட்டியில் விதர்பா அணியை வீழ்த்திய அஜிங்க்யா ரஹனே தலைமையிலான மும்பை அணி 45-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்தத் தொடரில் மும்பையில் நடந்த 2வது அரையிறுதிப் போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதிய நிலையில், இன்னிங்ஸ் மற்றும் 70 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையிடம் தமிழ்நாடு அணி தோல்வியுற்றது.
குற்றச்சாட்டு
இந்நிலையில், இந்தப் போட்டியில டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது தான் தோல்வியை கொடுத்ததாக தமிழக அணியின் பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி பரபரப்பான கேப்டன் சாய் கிஷோர் மீது குற்றம் சாட்டை வைத்தார். போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய குலத்தன் குல்கரனி, "பிட்ச்சை நான் பார்த்ததும் எங்களுக்கு என்ன கிடைக்கும் என்பது எனக்கு நன்றாக தெரிந்தது.
எப்போதும் நான் நேரடியாக பேசி விடுவேன். இந்த போட்டியின் முதல் நாள் காலை 9 மணிக்கே நாங்கள் தோற்று விட்டோம். டாஸ் வென்ற எங்களுக்கு அனைத்தும் கிடைத்தது. நான் மும்பையை சேர்ந்த நபர் என்பதால் இங்குள்ள சூழ்நிலைகள் எனக்கு நன்றாக தெரியும்." என்றார்.
எதிர்ப்பு
இந்நிலையில், தமிழக பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி பேச்சுக்கு தமிழக கிரிக்கெட் வட்டாரத்தில் கடுமையான எதிர்ப்புகள் கிளம்பின. பயிற்சியாளர் குலத்தன் குல்கர்னியை இந்திய அணி வீரரும், மூத்த தமிழக வீரருமான தினேஷ் கார்த்திக் கடுமையாக சாடினார். இதேபோல், முன்னாள் இந்திய அணி வீர்களான கே ஸ்ரீகாந்த், ஹேமங் பதானி ஆகியோரும் கடுமையாக விமர்சித்தனர். பொதுவெளியில் கேப்டனுக்கு ஆதரவாக நிற்காத பயிற்சியாளர் ஒருவாய் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் இனி நியமிக்கக் கூடாது என்று கூறி சாடியிருந்தார் ஸ்ரீகாந்த்
ராஜினாமா
இந்த நிலையில், தமிழக கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் குலத்தன் குல்கரனி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட காரணங்களால் அடுத்த சீசனில் இருந்து தமிழக அணியின் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை என்று தெரிவித்துள்ள குலத்தன் குல்கரனி தனது ராஜினாமா கடிதத்தை தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்திற்கு மெயில் மூலம் அனுப்பியுள்ளார்.
பயிற்சியாளர் குலத்தன் குல்கரனிக்கு தேர்வுக் குழு மற்றும் அணி வீரர்களுடன் கருத்து வேறுபாடுகள் இருந்ததாக தெரிகிறது. வெளிமாநில வேகப்பந்து வீச்சாளரைக் (குல்தீப் சென்) தேர்வு செய்வதற்கான அவரது முடிவுக்கு சங்க உறுப்பினர்களிடமிருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. என் ஜெகதீசன் போன்ற மூத்த வீரர்கள் அவரது பயிற்சி ஸ்டைலை விரும்பவில்லை. ஜெகதீசன் தான் அதிக அழுத்தத்திற்கு உள்ளானதாகவும், கேப்டன் சாய் கிஷோர் தன் மீது வைத்திருந்த நம்பிக்கைதான் தன்னை சீசன் முழுதும் ஆட வைத்தது என்றும் கூறியிருந்தார்.
ஆனால், குல்கர்னி, அவரது பங்கிற்கு, அணியைச் செயல்பட வைக்க அவ்வப்போது கடிமான வார்த்தைகள் கூறுவது அவசியம் என்று குறிப்பிட்டார். பயிற்சியளராக அவர் ஆர் விமல் குமார், பூபதி வைஷ்ண குமார் மற்றும் எஸ் முகமது அலி போன்ற வீரர்களுக்கு அறிமுகமாகும் வாய்ப்பை வழங்கினார்.
அவரது தலைமையிலான தமிழ்நாடு கிரிக்கெட் அணி 2016-17க்குப் பிறகு முதன்முறையாக ரஞ்சி கோப்பை நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. இதேபோல், விஜய் ஹசாரே டிராபியின் அரையிறுதியை எட்டிய தமிழக அணி, சையது முஷ்டாக் அலி டிராபியின் முதல் சுற்றில் தோல்வியடைந்தது. தற்போது பந்துவீச்சு பயிற்சியாளராக இருக்கும் எல் பாலாஜிக்கு பயிற்சியாளராக பதவி உயர்வு கிடைக்கும் எனப் பரவலாக பேசப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.