இந்தியாவில் நடக்கும் உள்நாட்டு டி 20 கிரிக்கெட் லீக்குகளில் சூதாட்டம் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. இதனால் பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்பு பிரிவு (ஏ.சி.யு) கடுமையான கவலையை வெளிப்படுத்தியுள்ளதுடன், இந்த லீக்குகளை பரிசீலிக்கும்படி வாரியத்திடம் கேட்டுள்ளது.
துடி பேட்ரியேட்ஸ் (தூத்துக்குடி) மற்றும் மதுரை பாந்தர்ஸ் இடையே இந்த ஆண்டு நடந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்) போட்டியில் 24 மில்லியன் (சுமார் 225 கோடி ரூபாய்) சூதாட்டம் நடந்ததை கண்டறிந்த ஏ.சி.யு, பி.சி.சி.ஐ.க்கு ரகசிய அறிக்கை சமர்ப்பித்துள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸுக்கு தெரிய வந்துள்ளது.
உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடக்காத அளவு பெரும் சூதாட்டமாக இது தெரிகிறது. உலகெங்கிலும் எங்கு டி 20 லீக் நடந்தாலும், அப்போது எந்தவொரு அணிக்கும் முரண்பாடுகள் இருக்கிறதா என்பதை கண்காணிக்கும் இரண்டு ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து ACU அறிக்கை பெற்றுள்ளது.
இது பற்றி மேலும் விபரம் அறிய, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பலமுறை முயற்சித்த போதிலும் ஏ.சி.யு தலைவர் அஜித் சிங்கை தொடர்புக் கொள்ள முடியவில்லை. கடந்த வாரம், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி இரண்டு டிஎன்பிஎல் உரிமையாளர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டதாக அறிவித்தார். இருப்பினும், எந்தவொரு உரிமையாளரும் இடைநிறுத்தம் செய்யப்படவில்லை என தமிழக கிரிக்கெட் சங்கத்தின் (டி.என்.சி.ஏ) அதிகாரி ஒருவர் தெரிவித்தார். டி.என்.சி.ஏ-வின் உள் விசாரணைக் குழுவின் ஆலோசனையின் பேரில் ’துடி பேட்ரியாட்ஸின்’ இரு இணை உரிமையாளர்கள் வெளியேற்றப்பட்டனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்திய வீரர், ஐபிஎல் வழக்கமாக விளையாடுபவர், மற்றும் ரஞ்சி டிராபி பயிற்சியாளர் ஆகியோர் டி.என்.பி.எல்-லில் சூதாட்டம் தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் ஏ.சி.யுவின் உள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக, கடந்த செப்டம்பர் மாதம் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்திருந்தது.
அணி உரிமையாளருடன் சட்டவிரோத ஒப்பந்தத்தின் மூலம் மேட்ச் ஃபிக்ஸர்கள், "பந்தயத்தில் வெற்றி பெறும் வகையில் அணியை நடத்துகிறார்கள்" என்று விசாரணையில் தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவித்தன. பிரீமியர் நேஷனல் டி 20 போட்டியின் சமீபத்திய பதிப்பான சையத் முஷ்டாக் அலி டிராபியில் சம்பந்தப்பட்ட ஒரு வீரர் புக்கிகளுக்கு அணுகியதாகவும் கங்குலி கூறியிருந்தார். அதோடு கர்நாடக பிரீமியர் லீக் (கே.பி.எல்) நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் முன்னாள் இந்திய கேப்டனான கங்குலி தெரிவித்தார்.
பல்வேறு டி 20 லீக்குகளில் நடந்த ஊழல், கடந்த ஆண்டை விட ஏ.சி.யுவை பிஸியாக வைத்திருக்கிறது. லீக் முழுவதும் ஊழல் தொடர்ந்தால் ACU வலுப்படுத்தப்படும் என்று கூறிய கங்குலி, தற்போதைய அமைவு அடுத்த ஆண்டு மதிப்பீடு செய்யப்படும் என்றும் கூறினார். ”நாங்கள் ஊழல் எதிர்ப்பு முறையைக் கையாள்கிறோம். சிறந்த ஊழல் எதிர்ப்பு வாதிகளின் மூலம் இதனை பலப்படுத்த வேண்டும். அதை நாங்கள் மதிப்பிடுவோம், அடுத்த ஆண்டு ஊழல் நிறுத்தப்படாவிட்டால், அதனைத் தடுக்க வேறு ஏதாவது யோசிப்போம்” என்றும் கங்குலி கூறினார்.
இதற்கிடையில், பெங்களூரு குற்றப்பிரிவு, கே.பி.எல் ஊழல் மற்றும் ஸ்பாட் பிக்சிங் தொடர்பாக பலரை கைது செய்துள்ளது. இதில் மிக முக்கியமாக கர்நாடக அணியின் முன்னாள் கேப்டன் சி.எம் கெளதம் கைது செய்யப்பட்டுள்ளார். பெலகாவி பாந்தர்ஸ், அஸ்பக் அலி தாரா அணி உரிமையாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.