செய்யது முஸ்டாக் அலி கோப்பை 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஜனவரி 10ம் தேதி முதல் கொல்கத்தாவில் நடந்து வருகிறது. இந்த தொடரில் தொடர்ச்சியாக 5 போட்டிகளை வென்ற தமிழக அணி காலிறுதிக்கு முன்னேறி இருந்தது. காலிறுதிப் போட்டியில் தமிழக அணியும் இமாச்சல பிரதேச அணியும் மோதிக்கொண்டன, அதில் தமிழக அணி வென்று அரை இறுதிக்கு முன்னேறியது. இந்த நிலையில், இன்று (வெள்ளிக்கிழமை) ராஜஸ்தான் அணிக்கு எதிராக நடந்த அரையிறுதி போட்டியிலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணியின் பாரத் சர்மா பூஜ்ஜிய ரன்னில் அவுட் ஆகி வெளியேற, மறுமுனையில் இருந்த ஆதித்யா கர்வால் நிதான துவக்கம் தர அந்த அணி மெதுவாக ரன்களைச் சேர்க்க ஆரம்பித்து இருந்தது. அபராஜித் வீசிய பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த கர்வால் அருண் கார்த்திக் கையில் கேட்ச் கொடுத்து பெவிலியன் நோக்கி நடந்தார். பின்னர் களமிறங்கிய அர்ஜித் குப்தாவுடன் ஜோடி சேர்ந்த அந்த அணியின் கேப்டன் அசோக் மெனரியா அணியை சரிவில் இருந்து மீட்க நாலாபுறமும் அதிரடி காட்டினார். சாய் கிசோர் வீசிய பந்தை லெக் சைடில் விளாச முயற்சித்த அசோக் மெனரியா அங்கு நின்று கொண்டிருந்த அருண் கார்த்திக் கையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். சிறப்பாக ஆடி இருந்த மெனரியா 32 பந்துகளில் 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளை அடித்து 51 ரன்களை சேர்த்திருந்தார். இது அந்த அணி வலுவான இலக்கை அமைக்க வழி செய்தது. பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை அந்த அணி சேர்த்திருந்தது.
தமிழக அணியில் சிறப்பாக பந்து வீசிய எம் முகமது 4 விக்கெட்டுகளையும், சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளையும், சோனு யாதவ், பாபா அபராஜித், மற்றும் முருகன் அஸ்வின் தல ஒரு விக்கெட்டையும் எடுத்தனர். சிறப்பாக பில்டிங் செய்த அருண் கார்த்திக் 4 கேட்ச்களை பிடித்து அசத்தினார்.
அதன் பின் களமிறங்கிய தமிழக அணியி, துவக்க வீரர் ஹரி நிஷாந்த் சொற்ப ரன்னில் வெளியேற, மறுமுனையில் நின்று கொண்டிருந்த
நாராயண் ஜெகதீசன் நிதானமாக ஆட துவங்கினார். அபராஜித் விக்கெட்டுக்கு பிறகு இறங்கிய அருண் கார்த்திக்வுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடிக் கொண்டிருந்தார். லெக் சைடில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்த ஜெகதீசன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். பின்னர் களமிறங்கிய அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்வுடன் ஜோடி சேர்ந்த அருண் கார்த்திக் அதிரடி காட்டி அணியை சரிவில் இருந்து மீட்டார். இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய இந்த ஜோடியில் தினேஷ் கார்த்திக், 17 பந்துகளில் 3 பவுண்டரிகளுடன் 26 ரன்களை எடுத்தார். அதிரடி காட்டிய அருண் கார்த்திக் 54 பந்துகளில் 3 சிக்ஸர்களையும், 9 பவுண்டரிகளையும் அடித்து 89 ரன்கள் எடுத்தார். இதுவே இவர் செய்யது முஸ்டாக் அலி கோப்பை போட்டிகளில் எடுத்த அதிக பட்ச ரன்கள் ஆகும். இந்த அபார வெற்றி மூலம் தமிழக அணி, ஞாயிற்று கிழமை நடக்கும் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது .
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " t.me/ietamil