17-வது சையத் முஷ்டாக் அலி டி20 கிரிக்கெட் போட்டி மும்பை, இந்தூர், ராஜ்கோட், ஐதராபாத் உள்பட பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் பஞ்சாப், 3 முறை சாம்பியனான தமிழகம், பெங்கால், பரோடா உள்பட 38 அணிகள் பங்கேற்கின்றன. அவை 5 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள் மற்றும் 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என 6 அணிகள் நேரடியாக காலிறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகள் தங்களுக்குள் 'நாக்-அவுட்' சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் 2 அணிகள் காலிறுதியை எட்டும்.
தமிழ்நாடு vs பரோடா அணிகள் மோதல்
இந்த தொடரில் குரூப் பி-யில் இடம் பெற்றுள்ள தமிழக அணி இதுவரை ஆடிய 2 லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. இந்நிலையில், தமிழக அணி தனது 3வது லீக் ஆட்டத்தில் இன்று (புதன்கிழமை) பரோடா அணிக்கு எதிராக களமாடியுள்ளது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பரோடா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்த நிலையில், தமிழக அணி முதலில் பேட்டிங் ஆடியது. தொடக்க வீரர்களாக களமாடிய பாபா இந்திரஜித் - என் ஜெகதீசன் ஜோடியில், இந்திரஜித் 25 ரன்னுக்கு அவுட் ஆனார். அடுத்து வந்த பூபதி குமார் 28 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இதனையடுத்து, களத்தில் இருந்த ஜெகதீசனுடன் கேப்டன் ஷாருக் கான் ஜோடி அமைத்தார். இந்த ஜோடியில் அரைசதம் அடித்து 32 பந்துகளில் 5 பவுண்டரிகள், 3 சிக்ஸர்களுடன் 57 ரன்கள் எடுத்த நிலையில் ஜெகதீசன் அவுட் ஆனார். 2 சிக்ஸர்களை பறக்க விட்ட கேப்டன் ஷாருக் கான் 39 ரன்னுக்கு அவுட் ஆகினார்.
களத்தில் இருந்த விஜய் சங்கர் 4 சிக்ஸர்களை பறக்கவிட்டு மிரட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த அவர் 22பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். இந்த வார தொடக்கத்தில் நடந்த ஐ.பி.எல் மெகா ஏலத்தில் அவரை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ. 1.2 கோடிக்கு வாங்கியது நினைவுகூரத்தக்கது.
6️⃣.6️⃣.6️⃣!🥳🔥
— Chennai Super Kings (@ChennaiIPL) November 27, 2024
Vijay in BEAST MODE! #SMAT #WhistlePodu@vijayshankar260
pic.twitter.com/6JFc0osJEy
இறுதியில், 20 ஓவர்கள் முடிவில் தமிழக அணி 6 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்தது. 222 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை பரோடா அணி துரத்தி வருகிறது.
தமிழ்நாடு: பாபா இந்திரஜித், என் ஜெகதீசன் (விக்கெட் கீப்பர்), பூபதி குமார், ரித்திக் ஈஸ்வரன், ஷாருக் கான் (கேப்டன்), விஜய் சங்கர், எம் முகமது, வருண் சக்கரவர்த்தி, ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், குர்ஜப்னீத் சிங், சந்தீப் வாரியர்.
பரோடா: நினாத் அஷ்வின்குமார் ரத்வா, மிதேஷ் படேல் (விக்கெட் கீப்பர் ), ஷிவாலிக் ஷர்மா, க்ருனால் பாண்டியா (கேப்டன்), அதித் ஷெத், ஹர்திக் பாண்டியா, விஷ்ணு சோலங்கி, பானு பனியா, மகேஷ் பித்தியா, ராஜ் லிம்பானி, லுக்மான் மேரிவாலா.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.