Tamilnadu Cricket Team | Vijay Hazare Trophy: 22-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி பெங்களூரு, ஜெய்ப்பூர், ஆமதாபாத், சண்டிகார், மும்பை ஆகிய நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 5 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதின.
லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பிடிக்கும் அணிகள், 2-வது இடம் பெறும் ஒரு சிறந்த அணி என்று 6 அணிகள் நேரடியாக கால்இறுதிக்கு தகுதி பெறும். 2-வது இடம் பிடிக்கும் எஞ்சிய 4 அணிகளில் இருந்து வெற்றி பெறும் 2 அணிகள் கால்இறுதியை எட்டும்.
கால்இறுதி மோதல் - தமிழ்நாடு வெற்றி
இந்நிலையில், விஜய் ஹசாரே கோப்பை தொடருக்கான காலிறுதி போட்டிகள் கடந்த திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் முதலாவது காலிறுதியில் பெங்கால் அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஹரியானா அரையிறுதிக்கு முன்னேறியது. 2வது காலிறுதியில் கேரளா அணியை வாரிச் சுருட்டிய ராஜஸ்தான் 200 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
3வது கால் இறுதியில் விதர்பாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சாய்த்து கர்நாடகா அணி அரை இறுதிக்கு முன்னேறியது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சனோசரா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த 4வது கால் இறுதியில் மும்பையை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய தமிழ்நாடு அரையிறுதிக்கு முன்னேறியது.
அரை இறுதி மோதல்
இந்த நிலையில், இன்று புதன்கிழமை (டிசம்பர் 13) நடக்கும் முதலாவது அரை இறுதிப்போட்டியில் தமிழ்நாடு அணி ஹரியானா அணியுடன் மோத உள்ளது. இப்போட்டியானது ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் மதியம் 1:30 மணிக்கு தொடங்குகிறது.
டாஸ் வென்ற ஹரியானா பேட்டிங்
இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹரியானா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடியது. ஹரியானா அணி 50 முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 293 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சதம் விளாசிய ஹிமான்ஷு ராணா 116 ரன்கள் எடுத்தார். அரைசதம் அடித்த யுவராஜ் சிங் 65 ரன்களும், சுமித் குமார் 48 ரன்களும் எடுத்தனர். தமிழக அணி தரப்பில் நடராஜன் 3 விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி, சாய் கிஷோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தமிழ்நாடு பேட்டிங்
தமிழ்நாடு அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய பாபா அபாராஜித் 7 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ஹரி நிஷாந்த் 1 ரன்னில் வெளியேறினார். மற்றொரு தொடக்க வீரர் ஜெகதீசன் 30 ரன்கள் அடித்து அவுட் ஆனார். விஜய் சங்கர் 23 ரன்களில் ரன் அவுட் ஆனார். பின்னர் ஜோடி சேர்ந்த பாபா இந்திரஜித் – தினேஷ் கார்த்திக் அணியின் எண்ணிக்கையை உயர்த்த முயன்றனர். தினேஷ் கார்த்திக் 31 ரன்களில் ஆட்டமிழந்தார்.
சிறப்பாக ஆடிய பாபா இந்திரஜித் அரைசதம் விளாசினார். அடுத்துவந்த ஷாரூக் கான் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிவந்த இந்திரஜித் 64 ரன்களில் அவுட் ஆனார். தமிழ்நாடு அணி 40 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 192 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இதனால் தமிழ்நாடு அணி 47.1 ஓவர்களில் 10 விக்கெட்களையும் இழந்து 230 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனையடுத்து ஹரியானா அணி 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹரியானா தரப்பில் அதிகபட்சமாக அன்ஷூல் 4 விக்கெட்களையும், ராகுல் திவேதியா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். இந்தத் தோல்வியால் தமிழ்நாடு அணி பைனலுக்கு முன்னேற முடியாமல் வெளியேறியது.
இரு அணிகளின் ஆடும் லெவன்
தமிழ்நாடு: பாபா அபராஜித், என் ஜெகதீசன், ஹரி நிஷாந்த், பாபா இந்திரஜித், விஜய் சங்கர், தினேஷ் கார்த்திக் (கேப்டன் / விக்கெட் கீப்பர்), ஷாருக் கான், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், மணிமாறன் சித்தார்த், வருண் சக்கரவர்த்தி, டி நடராஜன்.
ஹரியானா: யுவராஜ் சிங், அங்கித் குமார், ஹிமான்ஷு ராணா, அசோக் மெனாரியா (கேப்டன்), நிஷாந்த் சிந்து, ரோஹித் பர்மோத் சர்மா (விக்கெட் கீப்பர்), ராகுல் தெவாடியா, சுமித் குமார், ஹர்ஷல் படேல், அமித் ராணா, அன்ஷுல் கம்போஜ்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.