Advertisment

TN vs MUM Semi Final Highlights: தமிழ்நாடு பரிதாப தோல்வி - இறுதிப் போட்டிக்கு முன்னேறிய மும்பை!

ரஞ்சி கோப்பை தொடரில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று முதல் தொடங்கிய 2வது அரையிறுதிப் போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதி வருகின்றன.

author-image
WebDesk
New Update
TN vs MUM 2nd Semi Final Live Cricket Score updates in tamil

ரஞ்சி கோப்பை 2வது அரையிறுதி: தமிழ்நாடு vs மும்பை அணிகள் மோதல்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

Ranji Trophy 2024 | Tamil Nadu vs Mumbai 2nd Semi Final Live Cricket Score updates: இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வரும் 89-வது ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரில் மும்பையில் உள்ள பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் இன்று முதல் தொடங்கிய 2வது அரையிறுதிப் போட்டியில் மும்பை - தமிழ்நாடு அணிகள் மோதி வருகின்றன. 

Advertisment

முதல் நாள் ஆட்டம் - டாஸ் வென்ற தமிழ்நாடு பேட்டிங்

இந்நிலையில், இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தமிழ்நாடு அணியின் கேப்டன் சாய் கிஷோர் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தமிழ்நாடு அணி அதன் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்தது. அணியில் தொடக்க வீரர்களாக என். ஜெகதீசன் - சாய் சுதர்சன் ஜோடி களமிறங்கிய நிலையில், தொடக்க ஓவரிலே தனது விக்கெட்டை பறிகொடுத்த சாய் சுதர்சன் ரன் எதுவும் எடுக்காமல் டக்-அவுட் ஆகினார். 

அவரைத் தொடர்ந்து வந்த பிரதோஷ் பால் களத்தில் இருந்த ஜெகதீசனுடன் ஜோடி சேரவே, ஒரு பவுண்டரி விரட்டி 4 ரன் எடுத்த நிலையில் ஜெகதீசன் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதன்பின்னர் ஜோடி அமைத்த பிரதோஷ் பால் (8), சாய் கிஷோர் (1 ரன்) சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். அடுத்த 6 ஓவர்கள் தாக்குப்பிடித்த பாபா இந்திரஜித் 11 ரன்னுக்கு அவுட் ஆனார். இதனையடுத்து, ஜோடி சேர்ந்த  விஜய் சங்கர் - வாஷிங்டன் சுந்தர் சிறப்பான பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் சங்கர் 44 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினர். தனி ஒருவனாக நீண்ட நேரம் போராடிய வாஷிங்டன் சுந்தர் 43 ரன்னில் அவுட் ஆனார். 64.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்த தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் 146 ரன்கள் எடுத்தது. 

மிரட்டலான பந்துவீச்சை வெளிப்படுத்திய மும்பை அணியில் துஷார் தேஷ்பாண்டே 3 விக்கெட்டையும், ஷர்துல் தாக்கூர், முஜீர் கான், தனுஷ் கோடியான் தலா 2 விக்கெட்டையும், மோகித் அவஸ்தி ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினார். 

மும்பை பேட்டிங்

இதனைத் தொடர்ந்து, முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து வரும் மும்பை அணியில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய பிரித்வி ஷா 5 ரன்னுக்கும், பூபன் லால்வானி 15 ரன்னுக்கும் ஆட்டமிழந்து வெளியேறினர். முஜீர் கான் 24 ரன்னுடனும், மோகித் அவஸ்தி ஒரு ரன்களுடனும் களத்தில் இருக்க முதல் நாள் ஆட்ட நேரம் முடிவுக்கு வந்தது. 17 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்த மும்பை அணி 45 ரன்கள் எடுத்து தமிழ்நாடு அணியை விட 101 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்தது. 

2ம் நாள் ஆட்டம் - மும்பை பேட்டிங் 

2ம் நாள் ஆட்டம் தொடங்கி நடைபெற்ற நிலையில், தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை அணி ஒரு கட்டத்தில் 106 ரன்னுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து 8வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர் இணை நிதானமாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

இதில் ஹர்திக் தாமோர் 35 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அடுத்து வந்த ஷர்த்துல் தாக்கூருடன் தனுஷ் கோட்யான் ஜோடி சேர்ந்தார். இவர் ஒரு புறம் நிதானமாக ஆட மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய தாக்கூர் சதம் அடித்து அசத்தினார். சதம் அடித்த தாக்கூர் 109 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். இதையடுத்து துஷார் தேஷ்பாண்டே களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய தனுஷ் கோட்யான் அரைசதம் அடித்து அசத்தினார்.

இறுதியில், 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 100 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 353 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் மும்பை அணி 207 ரன்கள் முன்னிலை பெற்றது. மும்பை தரப்பில் தனுஷ் கோட்யான் 74 ரன்னுடனும், துஷார் தேஷ்பாண்டே 17 ரன்னுடனும் களத்தில் இருந்தனர். 

3ம் நாள் ஆட்டம் மும்பை பேட்டிங் 

இன்று 3ம் நாள் ஆட்டம் தொடங்கி நடந்த நிலையில், களத்தில் இருந்த தனுஷ் கோட்யான் - துஷார் தேஷ்பாண்டே ஜோடியில் தேஷ்பாண்டே 26 ரன்னில் அவுட் ஆனார். தனுஷ் கோட்யான் 86 ரன்னுடன் களத்தில் இருக்க, மும்பை அணி முதல் இன்னிங்சில் 378 ரன்கள் குவித்து ஆல்-அவுட் ஆனது. தமிழக அணி தரப்பில் கேப்டன் சாய் கிஷோர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

தமிழ்நாடு பேட்டிங் 

இதனையடுத்து,  232 ரன்கள் பின்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி முதல் இன்னிங்சை போலவே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 51.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த தமிழகம் 162 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 70 ரன்கள் வித்தியாசத்தில் இன்னிங்ஸ் வெற்றி பெற்ற மும்பை இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியுள்ளது.

தமிழக அணியில் அதிகபட்சமாக பாபா இந்திரஜித் 70 அடித்தார். மற்ற வீரர்கள் யாரும் பெரிய அளவில் ரன்கள் குவிக்கவில்லை. மும்பை அணியில் அதிகபட்சமாக ஷாம்ஸ் முலானி 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார். ஷர்துல் தாகூர் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

இறுதிப் போட்டியானது வருகிற 10 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. 

தமிழ்நாடு அணி: என். ஜெகதீசன், சாய் சுதர்சன், பாபா இந்திரஜித், பிரதோஷ் பால், விஜய் சங்கர், வாஷிங்டன் சுந்தர், சாய் கிஷோர் (கேப்டன்), எம்.முகமது, எஸ்.அஜித் ராம், சந்தீப் வாரியர், குல்தீப் சென்.

மும்பை அணி: பிரித்வி ஷா, ஸ்ரேயாஸ் அய்யர், பூபன் லால்வானி, அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), முஷீர் கான், ஷம்ஸ் முலானி, ஹர்திக் தாமோர், ஷர்துல் தாக்கூர், தனுஷ் கோடியான், மோகித் அவஸ்தி, துஷார் தேஷ்பாண்டே. 

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

Ranji Trophy
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment